தென்கிழக்கு வங்க கடலில் உருவான காற்றழுத்த தாழ்வு மண்டலம் கடந்த 8ந்தேதி புயலாக உருவெடுத்தது.
அதற்கு அசானி என்று பெயரிடப்பட்டுள்ளது.
அசானி புயல் ஆந்திரா-ஒடிசா மாநிலங்களை மிரட்டி கொண்டிருக்கிறது.
அசானி புயல் சின்னம் காரணமாக சென்னை விமான நிலையத்தில் 17 உள்நாட்டு விமான சேவை ரத்து செய்யப்பட்டன.
மேலும் சென்னையில் இருந்து அந்தமானுக்கு விமானங்கள் காலதாமதமாக புறப்பட்டு சென்றன.
இந்நிலையில், அசானி புயலால் ஏற்பட்டுள்ள காற்றழுத்த தாழ்வு பகுதியால் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
இதன்படி, அடுத்த 3 மணிநேரத்தில் சென்னை, திருவள்ளூர், காஞ்சீபுரம், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூரிலும் லேசானது முதல் மித அளவிலான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது.
இதேபோன்று தருமபுரி, கிருஷ்ணகிரி, சேலம், திருப்பூர் மாவட்டங்களிலும் அடுத்த 3 மணிநேரத்தில் மித அளவிலான மழைக்கு வாய்ப்பு உள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.
ஆகவே பொது மக்கள் அனைவரும் இடியுடன் கூடிய மழை பெய்யும் வேளைகளில் மின்னல் தாக்கத்தினால் ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கையினை எடுத்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தப்படுகின்றனர்.



