திருகோணமலை மாவட்டத்தில் கொரோணா பரவலானது சடுதியாக அதிகரித்திருப்பதை கருத்தில்கொண்டு இன்று முதல் அத்தியாவசிய சேவைகள் அல்லாத கடைகள் மற்றும் வியாபார ஸ்தலங்களை மூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இது குறித்த ஊடகவியலாளர்கள் சந்திப்பு இன்று திருகோணமலை நகர சபையில் இடம்பெற்றது.
மாவட்ட செயலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற விசேட கூட்டத்தின் போது எடுக்கப்பட்ட முடிவுகளுக்கு அமைய இன்று செவ்வாய்க் கிழமை முதல் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த அனைத்து வியாபார நிலையங்களையும் மூடுவதற்கு தீர்மானித்திருப்பதாக திருகோணமலை நகரசபை தலைவர் என்.இராசனாயகம் தெரிவித்தார்.
மேலும் மக்களுக்கு அத்தியாவசிய தேவைகளை பூர்த்திசெய்யும் முகமாக மக்கள் குடியிருப்பு பகுதியில் உள்ள சிறுகடைகள் திறக்கப்பட்டிருக்கும் எனவும் நடமாடும் சேவைகள் மூலம் மீன் மற்றும் மரக்கறி வகைகளை விநியோகிப்பதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்
குறித்த சந்திப்பில் திருகோணமலை நகரசபை தலைவர் என்.ராஜனாயகம், பட்டணமும் சூழலும் பிரதேசசபை தலைவர் சதுன் தர்ஷன ரத்னாயக்க, திருகோணமலை வர்த்தக சம்மேளன தலைவர் கே.குலதீபன் மற்றும் ஷிரோமன் ரங்கன் ஆகியோர் பங்கேற்றிருந்தனர்.



