செல்வ வளம் பெருக குரு பகவானுக்கு வியாழக்கிழமைகளில் செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

குரு பகவானின் அருளை பெறுவதற்குரிய ஒரு சிறந்த விரதம் தான் “வியாழக்கிழமை விரதம்”. இந்த விரதத்தின் மகிமை பற்றியும், அதனால் ஏற்படும் பலன்கள் என்ன என்பதையும் இங்கு அறிந்து கொள்ளலாம்.

வாரத்தில் வரும் ஏழு நாட்களில் வியாழக்கிழமை பிரகஸ்பதி எனப்படும் குரு பகவான் வழிபாட்டிற்குரிய தினமாக இருக்கிறது. எந்த ஒரு மாதத்திலும் சுக்ல பட்சம் எனப்படும் வளர்பிறையில் வரும் வியாழக்கிழமைகளில் இந்த வியாழக்கிழமை விரதத்தை மேற்கொள்ளலாம். ஒரு வருடத்தில் தொடர்ந்து 16 வளர்பிறை வியாழக்கிழமைகளில் இந்த வியாழ விரதம் மேற்கொள்வது மிகுந்த நன்மைகளை தரும். 3 ஆண்டு காலம் இந்த விரதத்தை சரியான படி அனுஷ்டிப்பவர்களுக்கு குரு பகவானின் பூரண அருள் வாழ்நாள் முழுவதும் கிடைக்கும்.

பிரகஸ்பதி எனும் குரு பகவானை குறித்து மேற்கொள்ளப்படும் இந்த வியாழக்கிழமை விரத தினத்தன்று அதிகாலையிலே எழுந்து தலைக்கு ஊற்றி குளித்து முடித்து விட வேண்டும். பிறகு மஞ்சள் நிற ஆடைகளை அணிந்து கொண்டு, எதுவும் உண்ணாமல், அருந்தாமல் அருகிலுள்ள கோயிலின் நவகிரக சந்நிதிக்கு சென்று குரு பகவானுக்கு மஞ்சள் நிற பூக்கள் சாற்றி, மஞ்சள் நிற இனிப்புகள் நைவேத்தியம் செய்து, சந்தனம், மஞ்சள் போன்றவற்றை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்விக்க வேண்டும். பின்பு குங்குமப்பூ கலந்த பசும்பாலை கொண்டு குரு பகவானுக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும்.

விரதம் இருக்கும் நாள் முழுவதும் உணவேதும் அருந்தாமல் இருப்பது விரதத்தின் முழுமையன பலன்களை தரும். அன்றைய தினம் குரு பகவானுக்குரிய மந்திரங்கள், ஸ்தோத்திரங்கள் போன்றவற்றை படிப்பது நல்லது. இரவில் உப்பு சேர்க்காத உணவை சமைத்து சாப்பிட்டு வியாழக்கிழமை விரதத்தை நிறைவு செய்யலாம்.

குரு பகவானுக்குரிய இந்த வியாழக்கிழமை விரதத்தை முறையாக மேற்கொள்பவர்களுக்கு வாழ்வில் பல யோகங்கள் ஏற்படும். சரியான காலத்தில் திருமணம் நடக்கும். ஜாதகத்தில் குரு கிரக தோஷம் இருப்பவர்களுக்கு இந்த விரதம் அனுஷ்டிப்பதால் அவை நீங்கும். தொழில், வியாபாரங்களில் சரியான வருமானம் இல்லாதவர்கள், குடும்ப பொருளாதார நிலை சிறப்பாக இல்லாதவர்கள் இந்த விரதம் மேற்கொள்வதால் குரு பகவானின் அருள் கிடைக்கப்பெற்று தொழில், வியாபாரங்களில் சிறந்து செல்வ வளம் பெருகி, சிறந்த வாழ்க்கை உண்டாகும்.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply