“பிற்போக்கு கலச்சார காவலர்களுக்கு சாட்டை அடி” – “நேர்கொண்ட பார்வை” விமர்சனம்!

0

நடிகர் அஜித்குமார்
நடிகை வித்யா பாலன்
இயக்குனர் எச்.வினோத்
இசை யுவன் சங்கர் ராஜா
ஓளிப்பதிவு நீரவ் ஷா
ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகிய மூன்று பேரும் ஒரே அறையில் தங்கி வெவ்வேறு பணிகளை செய்து வருகிறார்கள். இதில் ஷ்ரத்தா ஸ்ரீநாத் நட்சத்திர ஓட்டலில் நடனம் ஆடுபவராக இருக்கிறார்.

ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜுன் சிதம்பரம் ஆகியோருடன் மூன்று பெண்களும் விருந்துக்கு செல்கிறார்கள். அப்போது அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தா ஸ்ரீநாத்திடம் தவறாக நடக்க முயற்சி செய்ய, இதில் அர்ஜுன் சிதம்பரத்தை தாக்கிவிட்டு ஷ்ரத்தா ஸ்ரீநாத் தப்பித்து செல்கிறார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு என்ன நடக்கும் என்ற பயத்தில் மூன்று பெண்களும் இருக்கிறார்கள். நினைத்தபடி அர்ஜுன் சிதம்பரம், ஷ்ரத்தாவை பழிவாங்க நினைத்து அவர்களுக்கு தொந்தரவு கொடுக்க ஆரம்பிக்கிறார்.

அர்ஜுனின் தொல்லையை பற்றி போலீசில் புகார் கொடுக்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத். ஆனால் போலீஸ், அர்ஜுன் முதலில் புகார் கொடுத்ததாக கூறி ஷ்ரத்தா ஸ்ரீநாத்தை கைது செய்கிறார்கள். இவை அனைத்தையும் எதிர் வீட்டில் குடியிருக்கும் வழக்கறிஞர் அஜித், ஷ்ரத்தா ஸ்ரீநாத்துக்கு ஆதரவாக வாதாட ஆரம்பிக்கிறார்.

இறுதியில் அஜித், தனது திறமையான வாதத்தால் எப்படி வழக்கை முடித்தார்? என்பதே படத்தின் மீதிக்கதை.

மேலே குறிப்பிட்ட கதையில் அஜித்தின் பெயர் சிறிதளவே வந்தாலும், படத்தின் முழு வலுவையும் அஜித்தே சுமந்து நிற்கிறார். இந்தியில் வெளியான பிங்க் படத்தில் அமித்தாப்பச்சன் ஏற்று நடித்த கதாபாத்திரத்தை அஜித் ஏற்று நடித்திருக்கிறார். இதனால், மிகுந்த சவாலாக இருந்த கதாபாத்திரத்தை அஜித் மிகவும் நேர்த்தியாகவும், தனக்கே உரிய பாணியில் திறம்பட நடித்து அனைவரையும் கவர்ந்திருக்கிறார். குறிப்பாக சண்டைக்காட்சி, பைக் ஓட்டும் காட்சிகளில் அவரது ரசிகர்களை திருப்திபடைத்திருக்கிறார். ,

நாயகியாக நடித்திருக்கும் வித்யாபாலன், குறைந்த நேரம் மட்டுமே வந்தாலும், மனதில் நிற்கிறார். அஜித்துடனான இவரின் கெமிஸ்ரி நன்றாக ஒர்க்கவுட் ஆகியிருக்கிறது.


ஷ்ரத்தா ஸ்ரீநாத்திற்கு வலுவான கதாபாத்திரம். அதை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். கடினமான காட்சிகளில் தனது முழு திறமையையும் வெளிப்படுத்தி இருக்கிறார். இப்படம் அவருக்கு திருப்புமுனை ஏற்படுத்தும் விதமாக அமைந்திருக்கிறது. இவரது தோழிகளாக வரும் பிக்பாஸ் அபிராமி, ஆண்ட்ரியா தாரியங் ஆகியோர், கோர்ட் விசாரணை காட்சிகளில் நடிப்பால் ஸ்கோர் செய்திருக்கிறார்கள்.

அர்ஜுன் சிதம்பரம் பார்ப்பதற்கு அழகாகவும், கொடுத்த வேலையை சிறப்பாகவும் செய்திருக்கிறார். கோர்ட்டில் அஜித்துடன் விவாதம் செய்யும் காட்சியில் ரசிக்க வைத்திருக்கிறார். ஆதிக் ரவிச்சந்திரன், டெல்லி கணேஷ், ஜூனியர் பாலையா, அரசியல்வாதியாக வரும் ஜெய பிரகாஷ் ஆகியோரின் பங்களிப்பு திரைக்கதை ஓட்டத்திற்கு பெரிதும் உதவி இருக்கிறது.

தீரன் அதிகாரம் ஒன்று என்ற மாபெரும் வெற்றிப் படத்திற்குப் பின் இப்படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் எச்.வினோத். பிங்க் படத்தின் ரீமேக் என்றாலும், அஜித் ரசிகர்களுக்கு ஏற்றவாறு, அதே சமயம் பிங்க் படத்தின் கதையை ஏந்தவிதத்திலும் பாதிக்காத அளவிற்கு படத்தை இயக்கி இருக்கிறார். குறிப்பாக பெண்களுக்கு உண்டான பாதுக்காப்பு குறித்தும் அவர்கள் கடைபிடிக்க வேண்டிய ஒழுங்கு முறைகள் பற்றியும் அஜித் பேசும் காட்சிகளில் உயிரோட்டமாக உருவாக்கி இருப்பது சிறப்பு. தற்போது பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடந்து வரும் சூழ்நிலையில், இம்மாதிரியான படங்கள், பெண்கள் பாதுகாப்பு குறித்து பேசுவதும், அதில், முன்னணி நடிகர்கள் நடிப்பதும், சமுகத்திற்கு இதுவும் ஒருவழியில் உதவும் என்பதில் ஐயமில்லை.

யுவன் சங்கர் ராஜாவின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் விதம். பின்னணி இசை படத்திற்கு பக்கபலமாக அமைந்திருக்கிறார். பிங்க் படத்தின் அதே காட்சிக்காக ஒளிப்பதிவாளர் நீரவ் ஷா மெனக்கெட்டிருக்கிறார்.

மொத்தத்தில் ‘நேர்கொண்ட பார்வை’ பெண்களின் பாதுகாப்பு.- Source: maalaimalar


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply