
ஸ்ரீ வேதாந்த தேசிகன் வைணவ சமயப் பெரியவர்களுள் ஒருவர். கி.பி. 1268ஆம் ஆண்டு, விபவ வருடம், புரட்டாசி மாதம், திருவோண நட்சத்திரத்தில், புதன்கிழமை அனந்தசூரியார் – தோத்தாத்ரி அம்மை தம்பதிக்கு மகனாக காஞ்சிபுரத்தில் தூப்புல் (பொய்கையாழ்வார் பிறந்த விளக்கொளி பெருமாள் கோயில் பகுதி) எனும் இடத்தில் திருமலை வேங்கடவன் கோயில் மணியின் அம்சமாக பிறந்தவர். இவருக்குப் பெற்றோர் இட்ட பெயர் வேங்கடநாதன் என்பதாம். பின்னாளில் இவர் ‘சுவாமி தேசிகன்’, ‘தூப்புல் நிகமாந்த தேசிகன்’, ‘தூப்புல் பிள்ளை’, ‘உபயவேதாந்தாசாரியர்’, ‘சர்வ தந்திர ஸ்வதந்திரர்’ மற்றும் ‘வேதாந்த தேசிகன்’ என்னும் பெயர்களால் அழைக்கப் பெற்றார்.
திருப்பாணாழ்வார் பாடிய ‘அமலனாதி பிரான்’ என்னும் பதிகத்துக்கு பெரியவாச்சான் பிள்ளை ஆணைப்படி இவர் அமலனாதிபிரான் வியாக்கியானம் என்னும் விரிவுரை நூல் எழுதியுள்ளார். வடமொழிக்கு இணையாக தமிழ்மொழியும் தெய்வத்தன்மை உடையது என்று கூறியவர் இவர்.
உபய வேதாந்தம் எனும் கொள்கையை உருவாக்கி கோயில்களில் வடமொழியோடு ஆழ்வார்களின் திருமொழியும் இடம்பெறுமாறு செய்தவர் இவரே.
இவர் காலத்தில் தான் வைணவம் வடகலை, தென்கலை என இரண்டாகப் பிரிந்தது. மாலிக்காபூர் படையெடுப்பின் போது திருவரங்கக் கோயிலைக் காத்தவர்களுள் இவரும் ஒருவர். இவருடைய பாடல்கள் தேசிகபிரபந்தம் என்று அழைக்கப்படுவதோடு தினமும் பெரும்பாலான வடகலை வைணவர்களால் பாராயணம் செய்யப்பட்டு வருகிறது. வடகலை வைணவத்தை பின்பற்றும் கோயில்களில் இவருக்கென தனி சந்நதியோடு முதல் வழிபாடும் நடத்தப்படுகிறது. திருமலையில் வெள்ளிக்கிழமை திருமஞ்சனத்திற்கு (நீராட்டல்) முன் தேசிகரின் அடைக்கலப்பத்து இன்றும் பாடப்பெற்றுவருகிறது.

வேதங்களின் முடிவான உபநிஷதங்களில் கரை கடந்தவர் என்பதான பொருளில் ‘நிகமாந்த மஹா தேசிகன்’ என்று ஸ்ரீ வேதாந்த தேசிகரை சொல்வார்கள். ‘நிகமாந்த’ என்றாலும் ‘வேதாந்த ‘ என்றாலும் ஒன்றுதான். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர்’ என்றும் அவருக்குச் சிறப்பு உண்டு. குதிரை முகம் கொண்ட மஹா விஷ்ணுவான ஹயக்ரீவர் அவருக்குப் பிரத்யட்சம்.
வடகலை சம்பிரதாயத்துக்கு மூலபுருஷர் அவர். தமக்கென்று திரவியமே வைத்துக் கொள்ளாமல், யாசகம் எடுத்துத்தான் ஜீவித்து வந்தார். பெரியவர்களாக யார் இருந்தாலும் அவர்களுக்கு விரோதிகள் இருப்பார்கள். அந்தப் பெரியவரை அவமானப்படுத்திப் பார்க்க வேண்டும் என்று சூழ்ச்சி செய்கிறவர்கள் இருப்பார்கள்.
ஸ்ரீ வேதாந்த தேசிகருக்கும் இப்படிப்பட்ட விரோதிகள் இருந்தார்கள். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரர்’ என்றால் வெளி உதவி எதுவும் இல்லாமலே தாமே எதையும் சாதிக்கக்கூடியவராக இருக்க வேண்டும். இந்த தேசிகன் அப்படி எதையும் சாதித்து விட முடியாது என்று நிரூபித்து விடவேண்டும். ‘ஸர்வதந்திர ஸ்வதந்திரப்பட்டம் அவருக்குப் பொருந்தாது என்று லோகத்துக்குக் காட்டி, மானபங்கப்படுத்த வேண்டும்” என்று அவருடைய விரோதிகள் நினைத்து ஒரு சூழ்ச்சி செய்தார்கள்.
பரம ஏழையான ஓர் அசட்டு அந்தணன் திருமணமே ஆகாமல் ரொம்பவும் கஷ்டப்பட்டுக் கொண்டிருந்தான். பணம், புத்தி இல்லாதவனுக்கு, யார் பெண் கொடுப்பார்கள்? தேசிகனின் விரோதிகள் இந்தத் தடிமண்டுப் பிரம்மசாரியைக் கொண்டு, அவரை அவமானப்படுத்தி விடலாம் என்று நினைத்தார்கள்.
‘இந்தப் பையன் போய் அவரிடம் தனக்கு பணமுடிப்பு வேண்டும் என்று பிராத்தனை பண்ணட்டும். அவரிடமோ திரவியம் இல்லை. இவனுக்காக அவர் பிறரையும் யாசிக்கக்கூடாது. ‘ஸர்வதந்திர ஸ்வதந்திர’ என்றால், அவராகவே எப்படியோ இவனுக்கு வேண்டிய தனத்தை உண்டாக்கித் தந்துவிட வேண்டும்.
அவரால் இப்படிச் செய்ய முடியாது. உடனே, ”எப்படி ஐயா பெரிய பட்டத்தை வைத்துக் கொள்ளலாம்?” என்று கேட்டு, அவருடைய மானத்தை வாங்கிவிட வேண்டும் என்று திட்டம் போட்டார்கள். அதன் படி ஏழை பையனை அவர்கள் ஏவினார்கள். ஸ்ரீ தேசிகனிடம் ஏழை பிரம்மச்சாரி போய்த் தன் திருமணத்துக்குப் பணம் வேண்டும் என்று யாசித்தான்.
(எழுநூறு வருஷத்திய முந்தைய காலம் அது. பிள்ளை வீட்டுக்காரன், பெண் வீட்டுக்கு பணம் கொடுத்து கல்யாணம் பண்ணிகொண்டதாகவும் வரதட்சணை வாங்குகிற வழக்கம் இல்லை என்பதாகவும் நிரூபணம் ஆகிறது)வேதாந்த தேசிகருக்கு இது விரோதிகள் சூழ்ச்சி என்று தெரிந்து விட்டது. இருந்தாலும், அவர் தன்னை அவமானப்படுத்த வந்தவனிடமும் கருணை கொண்டார்.
வெள்ளிக்கிழமையான நாளை காலை பெருந்தேவித் தாயார் சந்நதிக்கு வா”, என்று சொல்லி அனுப்பினார். ஏழையும், தேசிகரும் கோயிலுக்குச் செல்வதை அறிந்த மக்களும் ஆலயத்தில் திரண்டனர். பெருந்தேவித்தாயாரான மஹாலட்சுமியை மனமுருக வேண்டி, ஒரு ‘ஸ்துதி’ செய்தார். அதுவே, உத்தமமான ‘ஸ்ரீஸ்துதி ஸ்தோத்திரம் ”.
உடனே பொன் மழை பொழிந்தது. அதை பிரம்மச்சாரிக்கு கொடுத்தார். விரோதிகளால், பெரியவர்களுக்குக் கடைசியில் மேலும் பெருமையே உண்டாகும். தேசிகருக்கும் அப்படிப் பெருமை உண்டாயிற்று. தேசிகர் திருமகள் அருள் பெற வேண்டி ‘ஸ்ரீஸ்துதி” என்னும் 25 ஸ்லோகங்களை, கொண்ட ஸ்தோத்திரத்தை ராகத்துடன் பாடினார். திருமகளும் தங்கக்காசுகளை அளித்து அவ்விடம் விட்டு அகன்றாள்.
எனவே திருமணம் போன்ற சுபநிகழ்ச்சிகளுக்கு பணத்தடை ஏற்பட்டாலோ, தினமும் கையில் பணம் புழங்கவும் ஸ்ரீஸ்துதியின் 21-வது ஸ்லோகத்தைப் பாராயணம் செய்வது நல்லது.இந்த ஸ்லோகத்தை சொல்ல இயலாதவர்கள் கீழ்க்கண்ட பொருளைச் சொல்லலாம்.பொருள்:கருணை மிக்க லட்சமி தாயே! தாயன்பைத் தருபவளே! பக்தர்களுக்கு துணை செய்பவளே! அமிர்தம் போல் குளிர்ச்சி மிக்கதும், பரிசுத்தமானதுமான அருளைத் தருபவளே கடும் வெயிலில் நடப்பவன் தாகத்தால் தவிப்பது போல், பொருளில்லாமல் வாடும் என்னை ஒரு கணநேரம் உன் கடைக்கண் பார்வையால் குளிரச் செய்வாயாக!- Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
