மனோபலமும், ஆன்ம பலமும் நிரம்பப் பெற்ற மார்கழி மாதத்தில் பிறந்தவரா நீங்க..? இது உங்களுக்காக..!

0

தனம், புத்திரம் ஆகிய இரண்டிற்கும் முக்கிய அதிகாரம் பெற்றிருக்கும் குருவின் சொந்த வீட்டில் சூரியன் தனுசு ராசியில் சஞ்சரிக்கும் மாதத்தை மார்கழி மாதம் என்று அழைக்கின்றோம். இந்த மாதத்தில் பிறந்தவர்கள் மனோபலமும், ஆன்ம பலமும் நிரம்பப் பெற்றவர்கள். எதையும் வேகமாகவும், விரைவாகவும் செய்து முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்கள். அரசியல், ஆன்மிகம், தத்துவம் போன்ற பல துறைகளில் பொறுப்புள்ள பதவிகளில் திறமையாக செயல்படுபவர்களுக்கு கல்வி அறிவும், அரிய பல நூல்களை கற்பதில் அதிக ஆர்வமும் இருக்கும். இவர்களில் பலர் பல மொழிகளில் பாண்டித்யம் பெற்று இருப்பார்கள். வெளிவிஷயங்களையும், பிறர் என்ன நினைக்கிறார்கள் என்பதையும் உடனே கிரகிக்கும் சக்தி உடையவர்கள். எந்த விஷயத்தை பற்றி விவாதிப்பது என்றாலும் அதைப்பற்றி உடன் படித்து தெரிந்து கொண்டு புள்ளி விவரங்களுடன் பேசுவார்கள்.

நுனிப்புல் மேய்வது இவர்களுக்குப் பிடிக்காது. பிடிவாத குணமும், முன்கோபமும் இருக்கும். அதே நேரத்தில் சூழ்நிலைக்கேற்ப தம்மை மாற்றிக்கொள்வார்கள். நியாயத்திற்கும், நேர்மைக்கும், தர்மத்திற்கும் கட்டுப்பட்டவர்கள். இவர்களிடம் ஒளிவு மறைவு இருக்காது. இதனால் பலரின் எதிர்ப்பை இவர்களே தேடிக்கொள்வார்கள். எந்த ஒரு வேலை அல்லது பொறுப்பை இவரை நம்பி, இவருடைய கண்காணிப்பில் ஒப்படைத்தால் அதை செவ்வனே செய்து முடிக்கக்கூடிய ஆற்றல் பெற்றவர்கள். பருவ வயதில் உள்ள ஆண்கள், பெண்கள் எதிலும் கவனமாக இருப்பது அவசியம். இவர்கள் பெற்றோர்களின் கண்காணிப்பில் வளர்வது மிகவும் அவசியமாகும். கூடா நட்பு கேடாய் விளையும் என்பதற்கேற்ப சிறு வயதில் தகாத சேர்க்கையால் சில இடையூறுகள் வரவாய்ப்புள்ளது. தீய பழக்கவழக்கங்கள் இவர்களை எளிதில் வந்து பற்றும். எதிலும் உணர்ச்சி வசப்பட்டு முடிவு எடுக்கக்கூடியவர்கள் என்பதால் பிரச்னைகளை இவர்களே வலிய சென்று வரவழைத்துக்கொள்வார்கள். பின்பு அதற்காக மிகவும் வருந்துவார்கள்.

போட்டி, பந்தயங்களில் கலந்துகொள்வது இவர்களுக்கு மிகவும் பிடித்தமான ஒன்றாகும். அறிவுத்திறன் போட்டிகள், படம் வரைவது கலைகளில் ஆர்வம் செலுத்துவது இயற்கையிலேயே அமைந்து இருக்கும். ஓட்டப்பந்தயம், தடகள விளையாட்டு, உடற்பயிற்சி, பளுதூக்குதல், நீச்சல், கேரம், செஸ் போன்ற விளையாட்டுக்களில் அதிக ஆர்வமும் எளிதாக அதில் உள்ள நுணுக்கங்களை கிரகித்துக்கொள்ளும் ஆற்றலும் மிக்கவர்கள். லக்கினம், லக்கினாதிபதி, குரு, புதன் ஆகியவை நல்ல அம்சத்தில் இருக்கப் பிறந்தவர்கள் எல்லா வகையிலும் வெற்றியாளர்களாகத் திகழ்வதற்கு யோகம் உண்டு. சாஸ்திர சம்பிரதாய ஒழுக்கம், ஞானம், சமூக நலன், பொதுநலனிலும் அக்கரை உடையவர்களாக இருப்பார்கள்.

தனம் குடும்பம் வாக்கு

இவர்கள் குடும்பத்தில் எல்லோரையும் அனுசரித்துச் செல்ல வேண்டும் என்ற எண்ணம் இருந்தாலும் அடிக்கடி இவர்களுக்கு தாழ்வு மனப்பான்மை, பிடிவாத குணம் தலை தூக்கும். இவர்களின் குற்றங்களை மிக சாமர்த்தியமாக மறைப்பார்கள். மற்றவர்களின் குற்றங்குறைகளை தேடிக் கண்டுபிடித்து சுட்டிக்காட்ட தயங்க மாட்டார்கள். பேசுவதை எல்லாம் பேசிவிட்டு வார்த்தைகளை அள்ளிக்கொட்டிவிட்டு பின்பு வருத்தப்படுவார்கள். பணம் கொடுக்கல், வாங்கலில் கறாராக இருந்தாலும், நெளிவு, சுழிவு பார்த்து நடந்துகொள்வார்கள். சேமிப்பில் இவர்கள் அதிக கவனமாக இருப்பார்கள். குரு, சனி, செவ்வாய் சாதகமாக இருக்கும் பட்சத்தில் இவர்களுக்கு பல வகைகளில் வருமானம் வரும். தங்கம், நிலம் போன்றவற்றில் முதலீடு செய்வது இவர்களுக்கு லாபத்தை தரும். நல்ல விஷயங்களை பேசி முடிப்பதற்கும், மத்தியஸ்தம், தூது செல்வதற்கும் மிகவும் ஏற்றவர்கள். சுய தேவைக்கும், ஆசைக்கும் பணம் செலவு செய்ய தயங்க மாட்டார்கள்.

திட தைரிய வீரியம்

தைரியமாகவும், விவேகமாகவும், வேகமாகவும் காரியம் சாதிப்பதில் இவர்களுக்கு இணை இவர்களே, பேச்சில் ஒளிவு, மறைவு இருக்காது. தற்புகழ்ச்சிக்கு மயங்குவார்கள். அதே நேரத்தில் பிறரை தட்டிக்கொடுத்து வேலை வாங்குவதில் கை தேர்ந்தவர்கள். வெளி விஷயங்கள், மனக்குழப்பங்களை பிறர் மீது காட்ட மாட்டார்கள். எந்த பிரச்னையாக இருந்தாலும் அைத சரியாக முடித்துவிட்டுத்தான் வேறு வேலை பார்ப்பார்கள். சனி, புதன் பலமாக அமையப் பெற்றவர்கள் ஆற்றல் மிக்கவர்களாக இருப்பார்கள். கால நேரத்தை விரயம் செய்யாமல் குறித்த நேரத்தில் எதுவும் நடக்க வேண்டும் என்று திடமாக செயல்படுவார்கள். மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இவர்களுக்கு இருக்கும். இருந்தாலும் எதை எதை எப்படி கையாள வேண்டுமோ அப்படி செயல்பட்டு வெற்றியடைவார்கள்.

சொத்து சுகம்

தனபுத்திரகாரகன் குருவின் அமைப்பு நல்ல யோக அம்சத்தில் இருந்தால் படிப்பறிவும் அனுபவ அறிவும் கை கொடுக்கும். தாய்வழி மூலம் சொத்து சேருவதற்கு அதிக வாய்ப்புண்டு. பூர்வீகச் சொத்துக்கள் இவர்களுக்கு உரிய காலத்தில் பலன் தரும். செவ்வாய் சாதகமாக இருந்தால் பூமி லாபம் உண்டு. எஸ்டேட், தோட்டம், தோப்பு போன்றவைகள் இவர்களுக்கு எளிதாக அமையும். கட்டிடங்கள், பிளாட்டுக்கள் மூலம் வருமானம் கிடைக்கும். சிந்தனா சக்திமிகுந்தவர்கள், எப்பொழுதும் எதையாவது கணக்குப்போட்டுக் கொண்டே இருப்பார்கள். மூளைக்கு அதிக உழைப்பைத் தருவதால் அடிக்கடி கழுத்துவலி, ஒற்றைத் தலைவலி, நரம்புத் தளர்ச்சி, பார்வை கோளாறுகள் ஏற்படும். ஜீரண கோளாறுகள் வருவதற்கு அதிக வாய்ப்புண்டு. ஆகையால் கண்ட நேரங்களில் இவர்கள் கண்டதை சாப்பிடாமல் இருப்பது நல்லது. ரத்த சம்பந்தமான நோய்கள் வரும் வாய்ப்பு அதிகம். குறிப்பாக மஞ்சள் காமாலை போன்றவற்றில் கவனமாக இருப்பது அவசியம். ரத்தத்தில் சர்க்கரையின் அளவை அடிக்கடி சரிபார்த்துக் கொள்வது நல்லது.

பூர்வ புண்ணியம் குழந்தைகள்

இவர்கள் கைராசி, வாக்குபலிதம் மிக்கவர்களாக இருப்பார்கள். இவர்களால் தொடங்கி வைக்கப்படும் நல்ல விஷயங்கள் மளமளவென பல்கிப் பெருகும். இவர்களுக்கு E.S.P. என்று சொல்லக்கூடிய காலத்தை முன்கூட்டியே அறியக்கூடிய ஆற்றல் இருக்கும். உள்ளுணர்வு அதிகம் இருக்கும். ஒருவரின் எண்ண ஓட்டத்தை சில நிமிடங்களிலேயே தெரிந்து கொள்வார்கள். ஆன்மிகத்தில் மனம் லயிக்கும். மந்திர, தந்திர, சாஸ்திர விஷயங்கள் மற்றும் தியானப் பயிற்சி இவர்களுக்கு சித்தியாகும். திருப்புகழ், தேவாரம், திருவாசகம் போன்ற நூல்களில் உள்ள பாடல்களை அதன் பொருள் உணர்ந்து ஓதி மனதை செம்மைப்படுத்தும் வழிமுறைகள் இவர்களுக்கு கைகூடும். சிவன், விநாயகர், முருகர் வழிபாடு இவர்களுக்கு நல்ல பலனைத் தரும். மகான்களின் சமாதிகளுக்குச் சென்று தரிசனம் செய்வதால் ஆன்ம பலம், லயம் கிட்டும். செவ்வாய், வியாழன் மற்றும் அமாவாசை நாட்களில் விரத வழிபாடு மேற்கொண்டால் நல்ல ஞான யோகம் சித்திக்கும். குழந்தைகள், பேரப்பிள்ளைகள் மூலம் பெருமை அடைவார்கள். சகோதர உறவுகளும் இவர்களுக்கு உறுதுணையாக இருப்பார்கள்.

ருணம் ரோகம் சத்ரு

இவர்களின் குணாதிசயங்கள் அடிக்கடி மாறுவதால் மறைமுக, நேர்முக எதிர்ப்புக்கள் இருக்கும். இருந்தாலும் அதையெல்லாம் இவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள். சனி சாதகமாக அமைந்தால் பெரிய அளவில் கடன் பிரச்னைகள் வராது. இவர்களின் எதையும் சமாளிக்கும் திறமை காரணமாக எதிலும் அகலக்கால் வைத்து சிக்கிக்கொள்ள மாட்டார்கள். ரத்த சொந்தங்கள் மூலம் பிரச்னைகள் வர வாய்ப்பில்லை. ஆனால் அக்கம், பக்கம் உள்ளவர்கள், தொழில் போட்டியாளர்கள் மூலம் சில வருத்தங்கள், சங்கடங்கள் வந்து தீரும். பெண்கள் மூலம் சில பிரச்னைகள், வம்பு வழக்குகள், சர்ச்சைகள் வருவதற்கு இடம் உண்டு.

பயணங்கள் மனைவி கூட்டாளிகள்

பயணங்களில் அதிக ஆர்வமும் நாட்டமும் உடையவர்களாக இருப்பார்கள். சிறுவயதில் நண்பர்களுடன் உல்லாசப் பயணங்கள் செல்வது மிகவும் பிடிக்கும். மலை, அருவி, எழில் தோற்றங்களை கண்டு ரசிப்பார்கள். அழகை ஆராதிப்பவர்கள். பயண அனுபவங்களை ரசனையுடன் மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்வார்கள். கப்பல் மற்றும் விமான பயணங்களில் அலாதி பிரியம் இருக்கும். நண்பர்கள், தொழில், வியாபார கூட்டாளிகளுடன் இவர்களுக்கு நல் உறவு இருக்கும். இவர்களின் விடாப்பிடியான குணநலன்களை புரிந்துகொண்டு விட்டுக்கொடுத்து விடுவார்கள். மனைவி வகையில் நல்ல யோக, போக, பாக்கியத்தை அடையக்கூடியவர்கள். பொதுவாக திருமணத்திற்கு பிறகுதான் இவர்களுக்கு நல்ல அதிர்ஷ்டகரமான வாழ்க்கை அமையும். சுக்கிரன் சாதகமாக அமைந்தால் இருவருக்கும் இல்லறம் இனிக்கும். சில நேரங்களில் இவர்களின் பிடிவாத குணம் காரணமாக இருவருக்கும் கருத்து வேறுபாடுகள் வந்துபோகும். கிரக தசா புக்திகள் சாதகமாக இல்லாமல் இருப்பார்கள். சிறிது காலம் பிரிந்து இருக்க வேண்டிய சூழ்நிலைகளும் வரும்.

தசமஸ்தானம் தொழில்

வேலைவாய்ப்பு, தொழில் வியாபாரம் போன்ற அமைப்புக்களில் இவர்கள் தனியார், அரசுத்துறையில் பெரிய பதவிகளில் அமரும் யோகம் உடையவர்கள். சமயோசித புத்தி, அறிவு, அனுபவ ஞானம் இவர்களுக்கு பெருமளவு கைகொடுக்கும். அரசாங்க நிர்வாக பதவிகளில் பணிபுரியும் அமைப்பு உண்டு. குரு, சனி, புதன் சாதகமாக அமையப்பெற்ற ஜாதகர்கள் நிதி, நீதித்துறையில் பணிபுரிபவர்கள் திறமை வாய்ந்த வக்கீல்களாக விளங்குவார்கள். சமய நெறி போதகர்களாகவும், சாஸ்திர, விஞ்ஞான ஆராய்ச்சி நிபுணராகவும், பேராசிரியர்களாகவும், வணிகவியல், கணக்கு, அக்கவுன்டன்சி, ஆடிட்டர்களாகவும் இருப்பார்கள். மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் ஹார்டுவேர் இன்ஜினீயர்களாக உருவாவதற்கு இடம் உண்டு. பத்திரிக்கை சம்பந்தமான தொழில் அச்சகத்தொழில், பதிப்பகம், புத்தக வணிகம் போன்றவற்றில் நல்ல நிலையை அடைவார்கள். இயல், இசை, நாடகம் திரைப்படம் சம்பந்தமான கலைத்துறை அது சார்ந்த உபதொழில்கள் இவர்களுக்கு அமையும். கார், லாரி, பஸ் போன்ற வாகனம் சம்பந்தமான டூரிஸ்ட் தொழில்கள் கைகொடுக்கும். நிலம் சம்பந்தமான ரியல் எஸ்டேட், அடுக்குமாடி கட்டி விற்பது, கமிஷன், புரோக்கர், கான்ட்ராக்ட் தொழில்கள் மூலம் பெரும் தனமும், புகழும் பெரும் அமைப்பும் இவர்களுக்கு கிடைக்கும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply