சத்குருவைச் சரணடைந்தவர்களை தீவினை விட்டு விலகியோடும்..!சீரடி சாய்பாபா

0

மனித வாழ்வில் அவர்கள் அனுபவிக்கும் நன்மைகளும் தீமைகளும், அவர்களின் முன்வினைப் பயனால் நிகழ்கின்றன. தொடர்ந்து வினைகளின் விசையினாலேயே இயங்கும் இந்த வாழ்வில், நன்மைகளை அனுபவிக்கும்போது மகிழ்ந்து திளைக்கும் மனிதமனம் துன்பங்களை அனுபவிக்கும்போது வாட்டமுறுகிறது. தீவினைப் பயன்களிலிருந்து விலகி, வாழும்போதே நன்மைகளை அடைய மனம் விரும்புகிறது. அருணகிரிநாதர், `முருகன் கால்பட்டு அழிந்தது, இங்கு என்தலை மேல்அயன் கையெழுத்தே’ என்று பாடுவார். அந்த பாக்கியம், அனைவருக்குமா வாய்க்கிறது… அதற்குதான் இறைவன் அவ்வப்போது மகான்களை இந்த உலகில் பிறப்பிக்கிறார். எவன் ஒருவன் சத்குருவைச் சரணடைகிறானோ அவன் சகலவிதமான வினைப்பயன்களில் இருந்தும் வாழும்போதே விடுதலையாகிறான். அப்படித்தான் பாபா தான் வாழ்ந்த காலத்தில் தன் பார்வையாலேயே பக்தர்களின் முன்வினைகளை நீக்கினார். சாயியைச் சரணடைந்த கணத்திலிருந்து அவர்களின் துன்பங்கள் மாறி இன்பங்கள் ஆகின.

நிஜாம் சமஸ்தானத்துக்கு உள்பட்ட நாந்தேட் என்னும் ஊரில் ரத்தன்ஜி என்கிறவர் வாழ்ந்துவந்தார். வாழ்க்கைக்குத் தேவையான செல்வம் அவரிடம் இருந்தது. சத்குணம் படைத்தவராகத் திகழ்ந்த ரத்தன்ஜிக்கு அழகான மனைவி, நல்ல உறவினர்கள் என்று வாழ்க்கை மிகவும் சிறப்பாக அமைந்திருந்தபோதும் ஒரே ஒரு குறை மட்டும் இருந்தது. அது, குழந்தைச் செல்வம் இல்லாத குறை. யார் என்ன அறிவுரை சொன்னாலும் அதைக் கேட்பார். எந்த தெய்வத்தை வழிபடச் சொன்னாலும் செய்வார். ஆனாலும் அவர் குறை நீங்கியபாடில்லை. அப்போதுதான் அவருக்கு தாஸ்கணு என்கிற சாயிநாதனின் பக்தர் ஒருவரின் அறிமுகம் கிடைத்தது. தாஸ்கணு, பசித்திருக்கும் ஒருவனுக்கு நீர்நிலையைக் காட்டுவதுபோல ரத்தன் ஜிக்கு ஷீரடியைக் காட்டினார். பாபாவின் மகிமைகளை எடுத்துச்சொல்லி சென்று தரிசனம் செய்துவருமாறு சொன்னார்.

வழி கேட்பவருக்கு, ஏற்கெனவே பாதையறிந்து பயணித்தவர் வழி சொல்லும்போதே நம்பிக்கை ஏற்பட்டு, போய்ச் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச்சேர்ந்த உணர்வைப் பெறுவதுபோல, தாஸ்கணு சொல்லும்போதே ரத்தன்ஜிக்கு பாபாவின் மீதும் ஷீரடி மீதும் பெரும் பற்று ஏற்பட்டது. ரத்தன்ஜி மலர்மாலைகளை வாங்கிக்கொண்டு ஷீரடி வந்துசேர்ந்தார். அவற்றைப் பாபாவின் பாதங்களில் சமர்ப்பித்தார். பாபாவும் மனமகிழ்ந்து அவரை ஆசீர்வதித்தார். பின், அவர் தன் குறையை பாபாவிடம் சொன்னார். பாபாவோ, “உன் குறைகள் எல்லாம் முடிந்துவிட்டன. உன் தீவினைகளை எல்லாம் நான் அழித்துவிட்டேன். இனி நீ வேண்டுவன எல்லாம் நடக்கும்” என்று சொல்லி ஆசீர்வதித்தார்.

பாபாவுக்கு ரத்தன்ஜி 5 ரூபாய் தட்சணை வைக்க விரும்பினார். பாபா உடனே மறுத்து,

“ரத்தன், ஏற்கெனவே உன்னிடம் நான் 3 ரூபாய் 14 பைசா வாங்கிக்கொண்டேன். மீதம் உள்ள 1.86 பைசாவை மட்டும் தந்தால் போதும்” என்றார். பாபா சொல்வது ரத்தனுக்கு ஒன்றும் புரியவில்லை. ஆனாலும், பாபாவிடம் மறுத்துப் பேச முடியாதல்லவா… அவர் சொன்ன காணிக்கையைக் கொடுத்துவிட்டு தன் ஊர் வந்து சேர்ந்தார்.

மனம் நிறைந்திருந்தபோதும், அவருக்கு பாபா சொன்ன அந்த 3.14 விஷயம் மட்டும் புரியவேயில்லை. தன் நண்பனிடம் போய் இதைப் பகிர்ந்துகொண்டார். அப்போது அவர், “பாபா, ஒரு தனி ஆள் இல்லை. அவர் இந்தப் பிரபஞ்சம் முழுமையும் நிறைந்தவர். ஏழைகள், அடியார்கள் என்று யாருக்கு நாம் தந்தாலும் செய்தாலும் அது நாம் பாபாவுக்கே செய்தவர்கள் ஆகிறோம். அதனால் நீ குழப்பிக் கொள்ளாதே” என்று சொன்னார்.

அவர் சொன்ன வார்த்தைகளில் ரத்தன்ஜிக்கு ஒரு சிறு துப்பு கிடைத்தது. கொஞ்ச நாள்களுக்கு முன்பு, இஸ்லாமிய அடியவர் ஒருவரைச் சந்தித்தார். அவர் பெயர் மௌலா சாஹேப். அவரை ரத்தன்ஜி வரவேற்று ஒரு விருந்து கொடுத்தார். அதற்கான செலவுக்குறிப்புகளைக்கூட எழுதி வைத்த நினைவு. உடனே வீட்டிற்குச் சென்று அதைத் தேடி எடுத்தார். செலவுக் கணக்குகளைக் கூட்டிப் பார்த்தால் அது சரியாக 3 ரூபாய் 14 காசுகள் இருந்தது. ரத்தன் ஜி பாபாவின் சர்வ வியாபித்த தன்மையை எண்ணி மகிழ்ந்தார். அடுத்த ஆண்டிற்குள்ளாக ரத்தன் ஜிக்கு அழகிய ஓர் ஆண்குழந்தை பிறந்தது. அவர் தன் வாழ்நாள் முழுவதும் பாபாவைத் தொழுதுகொண்டேயிருந்தார்.

பாபாவைச் சரணடைந்து வேண்டிக்கொண்டால், நம் முன்வினைகள் யாவும் தீரும் என்பதற்கு ரத்தன்ஜியின் வாழ்க்கை ஓர் உதாரணம்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply