ஷீரடி சாய் பாபாவின் பக்தரா நீங்க அவரின் பல ரூபங்கள், பல சக்திகள் பற்றி தெரியுமா..?

0

ஷிரடி பாபா அஷ்டமகா சக்திகள் பெற்றிருந்த மகான். அவர் பல தெய்வங்களின் வடிவில் பக்தர்கள் சிலருக்குக் காட்சி அளித்தார் என்பதை முன்பு பார்த்தோம். அவர் தெய்வங்களின் ரூபத்தில் மட்டுமல்லாமல் பல வித மனிதர்கள் ரூபத்திலும் பல்வேறு இடங்களில் பக்தர்களுக்குக் காட்சி அளித்திருந்தார்.

ஒரு முறை நாச்னே என்ற பக்தரின் சகோதரர் உடல்நலக்குறைவால் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டிருந்தார். நாச்னே தன் அண்ணனின் அறுவை சிகிச்சை நல்ல விதமாக முடிந்து அவர் குணம் அடைய வேண்டும் என்று பாபாவை ஆழ்ந்த பக்தியுடன் வேண்டிக் கொண்டிருந்தார். அறுவை சிகிச்சை நடந்த அந்த மருத்துவமனையில் ஒரு உருவத்திலும், அவர்கள் வீட்டில் வேறு ஒரு சாது உருவத்திலும் காட்சி அளித்தார். அந்த உருவங்களில் வந்தது பாபா தான் என்பதை நாச்னே அறிந்திருக்கவில்லை. ஷிரடி வந்து பாபாவை நேரில் தரிசித்த போது மருத்துவமனையில் நடந்த ஒரு நிகழ்வை அப்படியே விவரித்தார். அடுத்ததாய் பாபா ‘உன் வீட்டுக்கு நான் வந்த போது நீ வெண்டைக்காய் கறி எனக்குத் தரவில்லை’ என்று சொன்னார்.

அப்போது தான் நாச்னேக்கு ஒரு நாள் ஒரு சாது தனக்கு ரொட்டி வேண்டும் என்று கேட்டதும், அந்த சாதுவுக்கு அவருடைய அண்ணி ரொட்டி அளித்ததும் நினைவுக்கு வந்தது. வீட்டில் வெண்டைக்காய் கறி இருந்த போதும் அது மிக மலிவான ஒரு உணவாக அங்கு அக்காலத்தில் கருதப்பட்டதால் ஒரு சாதுவுக்கு மலிவான உணவுப் பொருளை அளிப்பதா என்று நினைத்த அண்ணி அந்த வெண்டைக்காய் கறியைப் பரிமாறாமல் மற்ற சமையலைப் பரிமாறினார். சாப்பிட்டு விட்டு அந்த சாது, ‘மருத்துவமனையில் அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடந்து முடிந்தது’ என்று அவர்களிடம் சொல்லி விட்டுப் போயிருந்தார்.

இன்னொரு முறை பி.வி.தேவ் என்பவர் தன் வீட்டில் நடக்கும் ஒரு விருந்துக்கு வருமாறு பாபாவை வேண்டி பாபாவின் சேவையில் இருந்த ஷாமா என்பவருக்குக் கடிதம் எழுதி இருந்தார். பாபாவும் வருவதாக ஒப்புக் கொண்டார். ஆனால் அந்த விருந்துக்கு பாபா செல்லவில்லை என்பதில் பி.வி.தேவுக்கு நிறைய வருத்தம். அவர் மறுபடி ஷாமாவுக்குக் கடிதம் எழுதி பாபா விருந்துக்கு வராமல் ஏமாற்றி விட்டார் என்று மிகவும் வருத்தப்பட்டார்.

அந்தக் கடிதத்தை ஷாமா பிரித்துப் படிக்கும் முன்னேயே பாபா சொன்னார். ‘இவன் ஏன் நான் அந்த விருந்துக்குப் போகவில்லை என்று வருத்தப்படுகிறான். நான் தான் இரண்டு பேருடன் போய் ‘பணத்துக்காக நான் இங்கு வரவில்லை. சாப்பாட்டுக்காகத் தான் வந்திருக்கிறேன்’ என்று சொன்னேனே. அவனுக்கு நினைவு இல்லையா?’

ஷாமா அதை பி.வி தேவுக்குத் தெரிவிக்கையில், தான் ஒரு துறவி இரண்டு சீடர்களுடன் விருந்துக்கு வந்ததையும், பாபா சொன்ன அதே வார்த்தைகளை அந்தத் துறவி சொன்னதையும் நினைவு கூர்ந்தார். அப்போது தான் அந்தத் துறவி வடிவில் பாபா வந்து போயிருப்பது பி.வி.தேவுக்குத் தெரிய வந்தது.

மனித ரூபங்களில் மட்டுமல்லாமல் விலங்கு ரூபங்களிலும் ரூபா பக்தர்களிடம் சென்றிருக்கிறார். அதற்கு ஒரு உதாரணம் பார்ப்போம்.

ஹன்ஸ்ராஜ் என்ற பக்தர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு இருந்ததால் தயிர் சாப்பிட வேண்டாம் என்று பாபா கூறி இருந்தார். ஆனால் ஹன்ஸ்ராஜுக்கு தயிரைத் தவிர்ப்பது கஷ்டமாக இருந்தது. ஒரு முறை அவர் வீட்டுக்குத் தயிர் சாப்பிடப் பூனை ஒன்று போன போது அதை அவர் அடித்துத் துரத்தி விட்டார். பின்னர் அவர் பாபாவைப் பார்க்கச் சென்ற போது பாபா உடலில் காயம் இருந்தது. என்ன என்று கேட்ட போது ‘நீ தயிர் சாப்பிடக்கூடாது என்பதற்காக பூனை வடிவில் வந்தேன். நீ என்னை அடித்துத் துரத்தி விட்டாய்’ என்று சொன்னவுடன் ஹன்ஸ்ராஜ் பதறி விட்டார். இது போல நடந்த நிகழ்ச்சிகள் ஏராளம்.

இனி பாபாவின் மற்ற அபூர்வ சக்திகள் சிலவற்றையும் பார்ப்போம்.

ஷிரடியில் நந்த்ராம் மார்வாடி என்பவர் வீட்டில் ஆரம்ப காலங்களில் பாபாவுக்கு பிச்சை இட்ட புண்ணியவான் களில் ஒருவர். ப்ளேக் நோய் பரவிக் கொண்டிருந்த காலத்தில் அவரும் ப்ளேக் நோய்க்கிருமிகளால் பாதிக்கப்பட்டார். அவர் ஷிரடியை விட்டே ஓடிப்போய் எங்காவது இறந்து விட எண்ணிய போது பாபா அவரிடம் ‘நான் வாழும் வரை உங்களிடம் மரணம் நெருங்காது. நீங்கள் எங்கேயும் செல்ல வேண்டியதில்லை’ என்று சொன்னார்.

அது போலவே அந்த சமயத்தில் நந்த்ராம் மார்வாடி மரணத்தில் இருந்து தப்பித்தது மட்டுமல்ல, பாபா மறைந்த பிறகும் பல காலம் உயிர் வாழ்ந்தார்.

அந்தக் காலக்கட்டத்திலேயே நடந்த இன்னொரு சுவாரசியமான சம்பவம், பாபா முக்காலமும் அறிந்த யோகி என்பதை மேலும் தெளிவுபடுத்துகிறது. காகா தீக்ஷித் என்பவர் பாபாவின் சேவையில் தன்னை அர்ப்பணித்துக் கொண்ட இன்னொரு மகா பக்தர். ஆரம்ப காலங்களில் காகா தீக்ஷித் தன் குடும்ப விவகாரங்களுக்காகக் கவலைப்பட்ட போதெல்லாம் ‘நீ ஏன் கவலைப்படுகிறாய். உன் விவகாரங்களைச் சரிப்படுத்தும் முழுப் பொறுப்பும் என்னுடையது’ என்று பாபா அவரிடம் சொல்வதுண்டு.

காகா தீக்ஷித்தும் அதை முழுமையாக நம்பி ஷிரடியிலேயே தங்கி விட்டார்.

காகா தீக்ஷித்தின் மகன் மும்பையில் படித்துக் கொண்டிருந்தான். 1913–ம் ஆண்டு பொதுத்தேர்வுக்கு இரண்டு மாதங்களுக்கு முன்னால் அவனுக்கு வந்த காய்ச்சல் என்ன மருந்து சாப்பிட்டும் குணமாகவில்லை. அதனால் தீக்ஷித்தின் சகோதரர், ‘உடனடியாக மும்பை வந்து மகனை நல்ல சிறப்பு மருத்துவரிடம் காண்பிக்கச் சொல்லி தீக்ஷித்திற்கு கடிதம் எழுதினார்’.

அந்தக் கடிதத்தை காகா தீக்ஷித் பாபாவிடம் படித்துக் காட்டிய போது ‘நீ மும்பை போவதற்குப் பதிலாக உன் மகன் ஷிரடிக்கு வருவது உத்தமம்’ என்று பாபா கூறினார்.

பாபாவின் பேச்சுக்கு மறுபேச்சு இல்லை என்கிற நிலையைக் கொண்டிருந்த காகா தீக்ஷித் அப்படியே தன் சகோதரருக்குக் கடிதம் எழுதினார். காகா தீக்ஷித்தின் சகோதரருக்கு பையனை ஷிரடிக்கு அனுப்புவதில் விருப்பம் இருக்கவில்லை. ஷிரடியில் படித்த டாக்டர்களும் இல்லை என்பதால் அரைமனதோடு தான் அவனை ஷிரடிக்கு அனுப்பினார். மும்பை போன்ற பெரிய நகர மருத்துவர்களாலேயே குணப்படுத்த முடியாத விசித்திரக் காய்ச்சல் ஷிரடி போனால் குணமாகும் என்பதில் அவருக்கு நம்பிக்கை இருக்கவில்லை. ஆனால் அவருடைய அவநம்பிக்கைக்கு எதிர்மாறாக காகா தீக்ஷித்தின் மகன் ஷிரடி வந்த பின் குணமாக ஆரம்பித்தான்.

காகா தீக்ஷித்தின் மகனுக்கு 2–11–1913 அன்று தேர்வு நடக்க உள்ளது என்றும், அவனை அதற்கு முன் மும்பை அனுப்பி வைக்கும்படியும் காகா தீக்ஷித்தின் சகோதரர் தேர்வு தேதி அறிவிக்கப்பட்டவுடன் கடிதம் அனுப்பினார்.

காகா தீக்ஷித் பாபாவுக்கு அதைப்படித்துக் காட்டினார். ஆனால் பாபா அந்தப் பையனை மும்பைக்கு அனுப்ப சம்மதிக்கவில்லை. இப்போது போக வேண்டாம் என்று சொல்லி விட்டார்.

இந்தத் தேர்வுக்குப் போகாவிட்டால் பையனின் எதிர்காலமே பாதிக்கப்படும் என்று தோன்றிய போதும் காகா தீக்ஷித் பாபாவின் பேச்சை மீறி அவனை மும்பைக்கு அனுப்பவில்லை. தேர்வு நாள் அன்று ஒரு ப்ளேக் எலி தேர்வு நடக்கும் மையத்தில் செத்து விழுந்து கிடந்ததால் அந்தத் தேர்வு 6–11–1913 அன்று ஒத்திப் போடப்பட்டது என்பது தான் ஆச்சரியம்.

6–11–1913 அறிவிக்கப்பட்ட தேர்வுக்கு முன்பும் அந்தப் பையனை மும்பை செல்ல பாபா அனுமதிக்கவில்லை. அந்த முறையும் தேர்வு மையத்தில் இன்னொரு ப்ளேக் எலி செத்து விழுந்து கிடந்ததால் அந்த முறையும் தேர்வு நடக்காமல் 13–11–13 தேதிக்கு ஒத்திப் போடப்பட்டது. அந்த தேதிக்கு முன்னால் போக பாபா ஆணை இட்டார். அந்தப் பையன் மும்பைக்குச் சென்று அந்தத் தேர்வை எழுதி மிக நல்ல மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றான்.

காகா தீக்ஷித் போன்ற பரம பக்தர்கள் பாபா மீது வைத்திருந்த அழுத்தமான நம்பிக்கைக்கும், அந்த நம்பிக்கை என்றுமே வீண் போகாது என்பதற்கும் இந்த நிகழ்ச்சி ஒரு நல்ல உதாரணம்.- Source: dailythanthi

Leave a Reply