
செல்வமும், மகிழ்ச்சியும் அளிக்கும் விதத்தில் ஜாதக ரீதியாக நூற்றுக்கும் மேற்பட்ட யோகங்கள் இருப்பதாக ஜோதிட சாஸ்திரம் குறிப்பிடுகிறது. ஒரு மனிதன் பிறக்கும்போது வான மண்டலத்தில் சுழலும் ஒன்பது கோள்களும், வெவ்வேறு நிலைகளில் அமைகின்றன. சில குறிப்பிட்ட நிலைகளில் அமர்ந்த கிரகங்கள் அளிக்கும் பலன்களை யோகம் என்று ஜோதிடம் குறிப்பிடுகிறது.
ஜெய யோகம் என்பது ஒருவரது சுய ஜாதகத்தின் ஆறாம் வீட்டில் உள்ள கிரகம் நீச்சம் பெற்றதாகவும், பத்தாம் வீட்டில் உள்ள கிரகம் உச்சம் பெற்றதாகவும் அமர்ந்துள்ள நிலையில் ஏற்படுவதாகும். இந்த யோகத்தில் பிறந்தவர்கள் வலிமையான உடல் அமைப்பை பெற்றிருப்பார்கள். மற்றவர்கள் மதிக்கும்படியான கம்பீரமான தோற்றம் கொண்டவர்கள்.

பெற்றோர்களை மதித்து நடப்பதுடன், அவர்களுக்கு மகிழ்ச்சி அளிக்கும் வகையில் நடந்து கொள்வார்கள். அரசாங்கம், ராணுவம் போன்ற துறைகளில் உயர் பதவிகளை குறுகிய காலத்திலேயே அடையும் திறமை இவர்களுக்கு இருக்கும். எதிர்பாராத சிக்கல்கள் காரணமாக கடன் வாங்கும் சூழல் ஏற்பட்டாலும், அதை விரைவில் வட்டியுடன் திருப்பி அடைத்து விடுவார்கள்.
எதிரிகள் இவர்களிடம் நேரடியாக மோதாமல் மறைமுகமாக மோதுவார்கள். பத்தாம் இடத்தில் அமர்ந்துள்ள கிரகத்தின் உச்ச நிலை காரணமாக, பெரும் தொழிலதிபர்களாக இருப்பார்கள். அரசாங்க அதிகாரிகளுக்கு ஆலோசனை அளிக்கும் அளவிற்கு தொழிலில் சிறப்பான அனுபவம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். இந்த யோகத்தில் பிறந்த சிலருக்கு திருமணத்திற்கு பின்னர் யோகமான வாழ்க்கை அமைவதாக ஜோதிட வல்லுனர்கள் பலரும் குறிப்பிட்டுள்ளனர்.- Source: maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
