குழந்தை பாக்கியம் அருளும் உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர்

0

விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் ஒன்றியத்தில் உலகியநல்லூர் ஊராட்சி உள்ளது. இந்த ஊரின் எல்லைப் பகுதியில் அருள்மிகு அர்த்தநாரீஸ்வரர் கோயில் உள்ளது. இங்கு 1184ம் ஆண்டு வீரராசேந்திர சோழன் என்கிற மூன்றாம் குலோத்துங்க மன்னன் ஆணைப்படி மகதை மண்டலத்தை ஆண்ட வாணகோவரையனால் உலகியநல்லூர் அர்த்தநாரீஸ்வரர் கோயிலின் கருவறையும், அர்த்த மண்டபமும் கட்டப்பட்டது. மகதை மண்டலம் என்பது சேலம் மாவட்டத்தின் கிழக்குப்பகுதியும், இன்றைய விழுப்புரம் மாவட்டத்தின் மேற்கு பகுதியும் இணைந்த பகுதியாகும்.

இதன் தலைநகராக ஆறகழூர் இருந்தது. மகதை வானவர் கள் சோழ அரசர்களின்கீழ் சிற்றரசர்களாகவும், அரசு அதிகாரிகள், படைத்தலைவர் களாகவும் இருந்துள்ளனர். மகதை மண்டலத்தின் ஜமீன்தாரர்களாக சின்னசேலத்தை சேர்ந்த பாளையக்காரர்கள் சுமார் 72 கிராமங்களுக்கு சிற்றரசர்களாக இருந்துள்ளதாக கல்வெட்டுகள் கூறுகிறது. இவர்கள் மரபில் அந்தாலன் தீர்த்த செழியன், தாகம் தீர்த்த செழியன், கங்காதர செழியன், திருவேங்கடசெழியன் ஆட்சி செய்ததாகவும் தெரிகிறது. இவர்களில் அந்தாலன் தீர்த்த செழியன் என்பவரே இந்த அரத்தநாரீஸ்வரர் கோயிலின் ஏழு நிலை உடைய ராஜகோபுரம், மூன்றாம் நிலை உடைய உள்கோபுரம், உள் மற்றும் வெளி மதில் சுவர்கள், மடப்பள்ளி, யாகசாலை, வாகன சாலை, திருக்குளம் ஆகியவற்றை கட்டி உள்ளார்.

இந்த கோயிலில் உள்ள அர்த்தநாரீஸ்வரர், பிரஹன்னநாயகியை வழிபட்டால் திருமண தோஷங்கள் நீங்கும். குழந்தை இல்லாதவர்கள் தொடர்ந்து வழிபட்டு வந்தால் குழந்தை பாக்கியம் கிடைக்கும். அதேபோல் நாகதோஷம் நீங்கும். ஒரு வருடத்திற்கு சுமார் 250 திருமணம் இந்த

கோயிலில் நடப்பது குறிப்பிடத் தக்கது. அதுமட்டுமல்லாமல் ஒவ்வொரு மார்கழி மாதத்திலும் இக்கோயிலில் நடக்கும் ஆருத்ரா தரிசன பூஜை வெகுவிமரிசையையாக நடக்கும். அதேபோல் பொங்கல் தினத்தில் வள்ளி, தெய்வானை, முருகன் வீதி உலா வரும். இந்து சமய அறநிலையத் துறையின் மூலம் ரூ.19.50 லட்சம் மதிப்பில் திருப்பணிகள் நடந்தாலும் இன்னும் பல பணிகள் செய்ய வேண்டி உள்ளது என பக்தர்கள் தெரிவிக்கின்றனர். விரைவில் மற்ற பணிகளையும் அரசு நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

செல்வது எப்படி?

சேலம் – சென்னை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள சின்னசேலத்தில் இருந்து கிழக்கு நோக்கி 12 கிமீ தொலைவில் உலகியநல்லூர் உள்ளது. டவுன்பஸ் வசதி உண்டு. காலை 6.30 மணி முதல் 11.30 மணி வரையும், மாலை 5 மணி முதல் 7.30 மணி வரையும் கோயில் நடை திறந்திருக்கும்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply