“பக்தன் வாக்கை மெய்ப்பிக்க அவதரித்த பகவான்…” இன்று பாவங்கள் போக்கும் நரசிம்ம ஜயந்தி!

0

அவதாரங்களுள் தனிச்சிறப்பு வாய்ந்தது நரசிம்ம அவதாரம். நாராயணன் என்ற சொல்லே நரசிம்ம அவதாரத்தைத்தான் குறிக்கும் என்று சான்றோர்கள் சொல்வது உண்டு. அந்த அளவுக்கு நரசிம்ம அவதாரம் பல்வேறு தனித்துவங்களைத் தன்னுள் கொண்டது. ராமாவதாரம் , `பித்ரு வாக்கியப் பரிபாலன’த்துக்காக நிகழ்ந்தது என்று சொல்வர். அதாவது, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை என்பதை மெய்ப்பிக்கவே ராமாவதாரம் நிகழ்ந்தது என்று சொல்லுவர். அதேபோல், ஒவ்வோர் அவதாரத்திலும், அதர்மத்தை அழிப்பதோடு, ஒரு தர்மத்தைக் காப்பது குறித்த நோக்கமும் கலந்திருக்கும். அப்படித்தான் நரசிம்மர், `பக்த வாக்கிய பரிபாலனம்’ என்னும் அடியார் வாக்கை, மெய்ப்பிக்க விரும்பி அவர் மேற்கொண்ட அவதாரம்’ என்கின்றனர்.

நரசிம்ம ஜயந்தி

திரௌபதியின் மானம் காக்க அவள், `கோவிந்தா’ என்று அழைத்ததும், அவன் இருந்த இடத்தில் இருந்தே அவளின் மானத்தைக் காத்தான். நேரே தோன்ற வேண்டிய அவசியம் அப்போது ஏற்படவில்லை. ஆனால், நேரில் தோன்றியே ஆகவேண்டிய கட்டாயம் எப்போது பகவானுக்கு ஏற்படுகிறதென்றால், பக்தனின் வாக்கைக் காப்பாற்ற வேண்டிய தருணம் ஏற்படுகிறபோது அது நிகழ்கிறது.

பிரகலாதனைப் பலமுறை இரண்யகசிபு துன்பப்படுத்த முயன்றான். அப்பொழுதெல்லாம், நாராயணன், இருந்த இடத்திலிருந்தே அவனைக் காத்தார். ஆனால், “உன் நாராயணன் எங்கிருக்கிறான்..?” என்று இரண்யகசிபு கேட்டதும், “அவன் தூணிலும் இருப்பான், துரும்பிலும் இருப்பான்” என்று பிரகலாதன் பதிலுரைத்ததும், அதை மெய்ப்பிக்க வேண்டிய கட்டாயம் நாராயணனுக்கு உருவாகிறது. இரண்யன் ஒரு தூணைக் காட்டி, “இந்தத் தூணில் இருக்கிறானா?” என்று கேட்டபோது, பிரகலாதனும் “ஆம்” என்று சொல்ல, இரண்யன், அந்தத் தூணை உடைக்க ஆரம்பித்தான். தூணைப் பிளந்துகொண்டு நரசிம்மர் வெளிப்பட்டார். இரண்யனை வதம் செய்தார்.

புராண காலங்களில் மட்டுமல்ல, எல்லாக் காலத்திலும் பெருமாள் பக்தர்களுக்காகப் பிரசன்னமாகி அருள்பாலிப்பது வழக்கம்.
கவிச்சக்கரவர்த்தி என்று போற்றப்படுபவர் கம்பர். ராமாயணக் காப்பியத்தைத் தமிழில் செய்து, இறவாப் புகழ் பெற்றவர். கம்பர், நரசிம்ம உபாசகர். கம்பர் என்ற சொல்லுக்கே கம்பத்திலிருந்து பிறந்தவர் என்ற பொருளும் உண்டு. அதனால்தான், ராமாயணக் காப்பியத்தினுள் நரசிம்ம அவதாரக் கதையினையும் சேர்த்து எழுதினார். அனுதினமும், நரசிம்மரை வழிபட்ட பின்னரே தன் பணிகளைத் தொடர்வார். ராமாயணக் காப்பியம் முழுவதும் எழுதி முடிக்கப்பட்ட பின்பு, அதை திருவரங்கத்தில் அரங்கேற்றம் செய்ய விரும்பினார் கம்பர். ஆனால், திருவரங்கத்தில் அவ்வளவு எளிதாக அனுமதி பெறமுடியவில்லை. ‘தில்லைவாழ் தீட்சிதர்கள் ஒன்றாக சேர்ந்து அங்கீகரித்தால் மட்டுமே அந்த நூலை திருவரங்கத்தில் அரங்கேற்ற அனுமதிப்போம்’ என்று சொல்லி மறுத்தனர் திருவரங்க வைணவர்கள்.

கம்பர், தில்லை வந்தார். அங்கு வாழ்ந்த எல்லா தீட்சிதர்களையும் ஒன்று சேர்ப்பது எளிதான காரியமில்லை என்று சொல்லி அவரைத் திருப்பி அனுப்பிவிட்டனர். இதனால் மனம் உடைந்த கம்பர், தான் வழிபடும் யோக நரசிம்மர் ஆலயத்துக்குச் சென்று அவர் சந்நிதியில் அமர்ந்து வருத்தத்தோடு தியானம் செய்தார். உடனே அவர் மனதுள், `உடனே தில்லைக்குப் போ’ என்ற குரல் கேட்டது. சற்றும் தாமதியாமல் கம்பர் ராமாயண ஏடுகளோடு தில்லை கிளம்பினார்.

தில்லையில் எல்லா தீட்சிதர்களும் ஓரிடத்தில் கூடியிருந்தனர். காரணம் கேட்டபோது, `தில்லைக் கோயிலில் பணி செய்யும் பிரதான தீட்சிதர் ஒருவரின் மகன் பாம்பு தீண்டி இறந்துவிட்டதாகவும், எல்லோரும் அந்த வருத்தத்தில் இருப்பதால் இப்போது காவியம் எல்லாம் கேட்க முடியாது’ என்றும் சொல்லினர். உடனே கம்பர், அந்தச் சிறுவனின் உடலை எடுத்துவருமாறு கூறினார். தான் எழுதியிருந்த ராமாயணக் காப்பியம், நாகபாசப் படலத்திலிருந்து சில பாடல்களைப் பாடினார். அப்போது கருடன் வானில் பறந்து அதன் நிழல் சிறுவன் மேல் விழுந்தது. சிறுவனும் உறக்கத்தில் இருந்து எழுந்தவன்போல எழுந்தான். இதனால் மனம் மகிழ்ந்த தில்லைவாழ் தீட்சிதர்கள் கம்பரின் காவியத்தை திருவரங்கத்தில் அரங்கேற்றலாம் என்று சான்றளித்தனர். திருவரங்கத்தில் கம்பர் அரங்கேற்றம் செய்கையில், நரசிம்ம அவதாரப் பாடல்களை வாசித்தார். அதில், `திசைதிறந்து அண்டங்கீறி சிரித்தது செங்கட் சீயம்’ என்ற வரிகளைப் பாடியபோது அங்கிருந்த யோக நரசிம்மர் சிரிக்கும் சத்தம் கேட்டது. திருவரங்கத்து அந்தணர்கள் அஞ்சி நடுங்கி, கம்பரின் காப்பியம் முழுமையையும் ஏற்பதாகச் சொல்லி வணங்கினர்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply