வறுமையைப் போக்கும் சொர்ணசீதை!

0

அச்சுதனைப் பாடுவது அவனை தரிசித்து மகிழ்வது எனும் பேறு கிடைத்துவிட்டால், வேறு எப்பேர்ப்பட்ட பேறுகள் கிடைத்தாலும் வேண்டேன் என்று ஆழ்வார்கள் உருகி உருகிப் பாடியதற்கு ஏற்ப, வெவ்வேறு கோலங்களில் அவனைத் தரிசிக்கும் வாய்ப்பு கசக்குமா என்ன? நண்பரின் வார்த்தைக்குக் கட்டுப்பட்டோம்.

திருவள்ளூருக்கு அருகிலேயே வேறுசில வைணவ க்ஷேத்திரங்கள் உண்டு என்று கூறிய நண்பர், நம்மை முதலில் அழைத்து சென்ற ஊர் ஈக்காடு.

மன்னனின் மகளாய்ப் பிறந்த சொர்ண சீதை!

ஈக்காடு எனும் அந்தத் தலத்துக்குச் செல்லும் வழிநெடுக, அதன் மகிமை களைச் சொல்லிக்கொண்டு வந்தார் நண்பர்.

“ஒருவகையில் ராமாயணத்தோடு தொடர்புடைய தலம் ஈக்காடு. ராமச்சந்திரமூர்த்தி ஒருமுறை அஸ்வமேத யாகம் செய்ய விரும்பினார். அப்போது சீதாபிராட்டியை வனத்துக்கு அனுப்பிவிட்ட நிலை. எனவே, பிராட்டியின் ஸ்தானத்தில் அவரைப் போலவே தங்கப் பிரதிமை ஒன்றைச் செய்து வைத்து யாகம் செய்தனர். யாகம் முடிந்து ராமபிரான் கிளம்பியபோது அந்த சொர்ண விக்கிரகம் பேசியது.

‘ஸ்வாமி, சீதாப் பிராட்டியின் ஸ்தானத்தில் வைத்து எனக்கு அருளினீர். தற்போது என்னைத் தனியாக விட்டுப் போகாமல் தங்களோடு அழைத்துச் செல்லவேண்டும்’ என்று விண்ணப்பம் செய்தாள், அந்தச் சொர்ண சீதை.

ராமசந்திரமூர்த்தியோ, ‘சொர்ண சீதையே, இந்த அவதாரத்தில் நான் ஏகபத்தினி விரதம் பூண்டுள்ளேன். எனவே சீதாவைத் தவிர வேறு பெண்ணை என் வாழ்வில் சிந்தையாலும் தொடேன். ஆனாலும் உனது பக்தியை நான் அறிகிறேன். கலியுகத்தில் நீ கனகவல்லியாக அவதாரம் செய்வாய். அப்போது, நான் உன்னைக் கரம் பிடிப்பேன்’ என்று வாக்குக் கொடுத்தார்.

யுகங்கள் கடந்தன. கலி யுகத்தில் தர்மசேனபுரம் என்னும் நகரை சத்தியம் தவறாமல் பரிபாலனம் செய்து வந்தார் மன்னன் தர்மசேனன். அவருக்கு மகளாக அவதரித்தாள் சொர்ணசீதை. மன்னன், அவளுக்கு வசுமதி என்று பெயரிட்டு வளர்த்து வந்தார்.

பேரழகியாக அன்னை வளர்ந்தார். அவளைக் கரம் பிடிக்கச் சரியான தருணம் வாய்க்கவும், ஸ்ரீவீரராகவப் பெருமாள் ஒரு ராஜகுமாரனின் தோற்றம் கொண்டு அவள் முன் தோன்றினார். ராஜகுமாரனின் சுந்தரத் தோற்றத்தைக் கண்டதும் வசுமதி மெய் சிலிர்த்தாள். அப்போதே, அவள் தன் பிறப்பின் ரகசியத்தையும் உணர்ந்தாள். ராஜகுமாரன் வசுமதியிடம் தன் காதலைச் சொல்லிக் கரம்பிடிக்க விண்ணப்பம் செய்தார். தந்தை சொல்லைப் பரிபாலனம் செய்தவர் ஆயிச்சே ராகவன். ஆகவே, அவரிடம் அன்னை ‘எனக்குத் தடையில்லை. ஆனபோதும் இந்தப் பிறவியில் என் தந்தையான தர்மசேனனின் அனுமதி கேளுங்கள்’ என்று கூறினாள்.

ராஜகுமாரனும் தர்மசேனனிடம் சென்று வசுமதியை மணம் முடிக்க அனுமதி கேட்டார். ராகவனின் முகதரிசனம் கண்ட பின்னரும் அவர் விண்ணப்பத்தை ஏற்க மறுப்பார் உண்டோ? மகிழ்ச்சியுடன் மகள் வசுமதியை அவருக்குத் திருமணம் செய்து கொடுத்தார் மன்னன்.

திருமணம் ஆனதும் புதுமணத் தம்பதியும் தர்மசேனனும் அவர்களின் குலதெய்வமான வீரராகவப் பெருமாள் ஆலயத்துக்கு வழிபடச் சென்றனர்.

தம்பதி கைகோர்த்தவண்ணம் கருவறையை நோக்கிச் சென்றனர். வழிபடவே செல்கிறார்கள் என்று மன்னன் பார்த்திருந்தார். ஆனால், தம்பதியோ கருவறைக்குள் சென்று மறைந்தனர். அப்போதுதான் அவர்கள் இருவரும் யார் என்பது மன்னனுக்குத் தெரிந்தது. தனது பாக்கியத்தை எண்ணி மகிழ்ந்தார். அன்னை அவதரித்த தலத்தில் ஒரு கோயில் கட்டினார். அந்தக் கோயிலுக்குத்தான் இப்போது நாம் செல்கிறோம்” என்று சொல்லி நண்பர் சொல்லி முடிக்கும் நேரத்தில் நாங்கள் ஈக்காடை அடைந்திருந்தோம்.

கோயில் பழைமையான கட்டடமாக இருந்தது. கோபுரங்கள் இல்லை. கோயிலுக்கு வெளியே கைகூப்பி நின்றருளும் சின்னத் திருவடியின் தரிசனம். கோயிலுக்கு முன்பாக ஒரு கல்மண்டபம். அதன் தூண்களில் நரசிம்மர், ஆஞ்சநேயர், கருடர் ஆகியோரின் திருவுருவங்களுடன், பல்வேறு உயிரினங்களின் சிலைகளும் காட்சி தந்தன. வலப்பக்கச் சுவரில் ராமாயணக் காட்சிகளும் நடன மங்கைக் காட்சிகளும் திகழ்கின்றன.
இந்தக் கோயிலின் வரலாறு குறித்த கல்வெட்டு எதுவும் காணக்கிடைக்கவில்லை. ஆனாலும், சிற்ப பாணியைக் காணும்போது, கோயில் விஜய நகரப் பேரரசின் காலத்தைச் சேர்ந்தது என்பதைக் கணிக்கமுடிகிறது.

உள்ளே சென்றதும் நமக்கு இடப்புறம் தாயாரின் சந்நிதி. வீரராகவனின் வரவை எதிர்நோக்கிக் காத்திருப்பது போல் தெற்கு நோக்கி அமர்ந்த கோலத்தில் அருள்கிறார், வசுமதித் தாயார்.

மேற்கு நோக்கிய சந்நிதியில் பெருமாள் கல்யாண வீரராகவராகக் அருள்பாலிக்கிறார். ஒரு கையால் அன்னையை ஆலிங்கனம் செய்தபடியும் மறுகையால் அபய ஹஸ்தம் காட்டியும் காட்சி கொடுக்கிறார். நாம் சென்றபோது திருமஞ்சனம் நடைபெற்றுக்கொண்டிருந்தது. அற்புதமான தரிசனம்! அர்த்த மண்டபத்தில் கோதை நாச்சியார், ஸ்ரீநிவாசப் பெருமாள், விஷ்வக் சேனர், ராமாநுஜர் ஆகியோர் அருள்புரிகின்றனர். மூலவருக்கு எதிரில் பெரியதிருவடி கருடாழ்வார்.

ஆலய தரிசனத்துக்கு வந்திருந்த பெரியவர் ஒருவரிடம் பேசினோம்.

“என் பெயர் வாசுதேவன். தற்போது போரூரில் இருக்கிறேன். எனக்கு ஈக்காடுதான் சொந்த ஊர். சிறுவயதில் தினமும் வந்து சேவிப்பேன். இப்போ எனக்குப் பேரப்பிள்ளைகள் இருக்காங்க. என் பேத்திக்குப் பிறந்தநாள். அதுக்காகத்தான் சேவிக்க வந்திருக்கோம். இந்தப் பெருமாள் வரப்பிரசாதி. கேட்கிற வரம் எதுன்னாலும் உடனே அருள்புரிவார். இங்கு பெருமாள் கல்யாண வீரராகவரா இருக்கிறதால இங்க வேண்டிக்கிட்டா சீக்கிரம் கல்யாணம் நிச்சயமா கும். தாயார் கனகவல்லி. கனகம்னா தங்கம். அன்னையை வேண்டிக்கிட்டா வறுமை தீர்ந்து செல்வம் கொழிக்கும்’’ என்று பக்திப் பெருக்கோடு சொன்னார். திருவள்ளூர் வீரராகவப் பெருமாள், தைமாத பிரம்மோற்சவத்தின்போது மூன்று நாள்கள் இங்கு எழுந்தருளுகிறார் என்கிற தகவலையும் அவரே சொன்னார்.

திருவள்ளூர் வீரராகவப் பெருமாளைச் சேவிக்க வருபவர்களில் பலருக்கு, இந்தத் தலம் குறித்துத் தெரிவதில்லை. விசேஷநாள்களில் மட்டும் பக்தர்கள் இங்கு வருகிறார்கள். மற்றபடி ஆலயம் அமைதியாக இருக்கிறது. வருவாய் குறைந்தபோதும் அர்ச்சகர் தினமும் ஆராதனை களைக் குறைவில்லாமல் பார்த்துக் கொள்கிறார். வைகாநஸ ஆகம முறைப்படி தவறாமல் பூஜைகள் நடந்துவருகின்றன. ஒருமுறை வந்து பலன் கண்ட பக்தர்கள், தொடர்ந்து வந்து கோயிலுக்கு உதவுகிறார்கள் என்று தெரிந்துகொண்டோம்.

ராமாவதாரத்தில் சொன்ன வார்த்தையைக் காப்பாற்றுவதற்காக, கலியுகத்தில் ராஜகுமார னாகத் தோன்றி சொர்ணசீதையின் கரம்பிடித்த வீரராகவ பெருமாளின் தரிசனத்தில் மெய்ம்மறந்து லயித்திருந்த நிலையில், “இந்தத் தலத்திலேயே நின்றுவிட்டால் எப்படி? அடுத்து நோய் நீக்கி வளம் அருளும் தலம் நோக்கிச் செல்லவேண்டும். புறப்படுவோம்” என்ற நண்பரின் குரல் கேட்டு சுயநினைவு பெற்று, ஈக்காடு திருக்கோயிலை விட்டுப் புறப்பட மனமில்லாமல் புறப்பட்டோம்.- Source: vikatan


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply