கேட்ட வரங்களை அள்ளி தரும் பெருமாளுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

வேலூர் மாவட்டம் ஆம்பூர் அருகே உள்ளது துத்திப்பட்டு கிராமம். இங்கு பழமையும் பெருமையும் மிக்க பிந்து மாதவ பெருமாள் கோயில் உள்ளது. பாலாற்றங்கரையில் அமைந்த இந்த பெருமாள் வரங்களை வாரி தரும் நாயகராக விளங்குகிறார். ஊரின் மத்தியில் 5நிலை கொண்ட கோபுரத்துடன் அழகாய் நிமிர்ந்து நிற்கிறது இந்த கோயில். கோயிலில் உள்ளே ஒரே கல்லால் ஆன அனுமன் உருவம் பொறித்த கல் தூண், கொடிமரம் காட்சியளிக்கிறது. இதன் பின்னர் பெரிய திருவடி என அழைக்கப்படும் கருடாழ்வார் தன்னை வணங்குபவர்களை இருகரம் கூப்பி வணங்கி அருள்பாலிக்கிறார். கோயில் மண்டபத்தை கடந்து மூலஸ்தானத்தில் ஆஜானுபாகுவான தோற்றத்தில் பிந்து மாதவ பெருமாள் நின்ற கோலத்தில் ஸ்ரீதேவி, பூதேவி தாயார்களுடன் கதாயுதத்தை கையில் பிடித்தபடி அருள்பாலிக்கிறார்.

இக்கோயிலில் சக்கரத்தாழ்வார், யோக நரசிம்மர், ஹயக்ரீவர், விஷ்ணுதுர்க்கை ஆகியோர் பரிவார தெய்வங்களாக காட்சியளிக்கின்றனர். மஹாலட்சுமி மற்றும் ஆண்டாள் தனித்தனி சன்னதியில் காட்சி தருகின்றனர். தல விருட்சமாக மகிழமரம் கோயிலில் ஆங்காங்கே ஓங்கி வளர்ந்து நிற்கிறது. இந்த மரத்தை அனுஷம் உட்பட பல்வேறு நட்சத்திரக்காரர்கள் சுற்றிவந்து வணங்கினால் நோய் நொடி நீங்கி பல்வேறு வளங்கள் பெற்று வாழலாம் என்பது நம்பிக்கை. கிபி 15ம் நூற்றாண்டில் கிருஷ்ணதேவராயர் இந்த கோயில் கல்மண்டபங்கள் அமைத்து புனரமைத்துள்ளதாக தகவல்கள் உள்ளன. இருப்பினும் கோயில் இங்கு அமைந்த தல வரலாறு மிகவும் ஆச்சர்ய தகவல்களை கொண்டு விளங்குகிறது.

முன்னொரு காலத்தில் ரோம மஹரிஷி எனும் முனிவர் வான்வழியே சென்றபோது பாலாறு மற்றும் அருகில் இருந்த சென்னப்பமலையை கண்டாராம். ஆறும் மலையும் ஒன்று சேர அமைந்த இந்த இடம் தனது தவத்திற்கு உகந்த இடமாக கருதி அங்கேயே தங்கி கோவிந்தரை நோக்கி தவமியற்றினார். இவரது தவத்தை கண்ட அங்குள்ள வனப்பகுதியில் வசித்து வந்த பிரதூர்த்தன் என்னும் அரக்கன் முனிவரின் தவத்திற்கு இடையூறு விளைவித்தான். இதனால் கடும் கோபம் கொண்ட முனிவர், அந்த அரக்கனை புலியாக மாற சாபமிட்டார். ஆனால், புலியாக மாறிய அந்த அரக்கன் முனிவரை கொன்று விட துரத்தினான். இதுபற்றி இந்திரனிடம் சென்று முனிவர் முறையிட்டார். இந்திரன் புலி உருவம் கொண்டு அரக்கனை எதிர்த்தார்.

இருபுலிகள் மோதியதில் இறுதியாக இந்திரன் வென்றார். அப்போது, தோல்வியை தழுவி காயங்களுடன் இருந்த பிரதூர்த்தன் தனக்கு ஒரு வரம் வேண்டினான். அவ்வாறே வழங்க இந்திரன் உறுதி அளித்தான். பெருமாளை வணங்கும் முனிவரின் தவத்திற்கு இடையூறு செய்தேன். அதற்கு பரிகாரமாக எனக்கு பெருமாள் சேவை செய்ய ஆசை. அவரது திரு உருவத்தை காண ஆசி வழங்குங்கள் என வேண்டினான். அவனது பக்தியை ஏற்ற பெருமாள் அங்கு எழுந்தருளி அவனது கோரிக்கையை நிறைவேற்றினார். அதுமட்டுமன்றி பிரதூர்த்தனின் பெயரால் அந்த இடம் பிரதூர்த்தபட்டு என வழங்கப்படவும், அங்கேயே இருந்து அருள்பாலிக்கவும் பெருமாள் விருப்பம் கொண்டார்.

அரக்கனின் ஆசை நிறைவேற்றி வரம் தந்த இறைவன் தற்போது தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு குறைவற்ற வரங்களை வாரி வழங்குகிறார். பிரதூர்த்தபட்டு என்னும் அந்த ஊர் தூர்த்தபட்டு என மாறி, தற்போது திரிந்து துத்திப்பட்டு என அழைக்கப்படுகிறது. சித்திரை முதல் நாள், புரட்டாசி 5 சனிக்கிழமைகள், வைகாசி மாத பிரம்மோற்சவத்தில் கருடசேவை உட்பட பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளல், பங்குனி உத்திர பெருவிழா, வரலட்சுமி விரதம் ஆகிய விழாக்கள் கோலாகலமாக நடக்கும் சமயத்தில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு பெருமாளை வழிபாடு செய்து பல்வேறு பாக்கியங்களை பெற்று மகிழ்கின்றனர்.- Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply