கடன் தொல்லை நீங்க நரசிங்க பெருமாளுக்கு செய்ய வேண்டிய வழிபாடுகள்..!

0

தேனி மாவட்டம் ஆண்டிபட்டியில் இருந்து 3 கிமீ தொலைவில் வைகை அணை சாலையில் உள்ளது ஜம்புலிபுத்தூர். இங்கு ஆயிரம் ஆண்டுகள் பழமையான கதலி நரசிங்க பெருமாள் கோயில் உள்ளது. இங்குள்ள கருவறையில் கதலி என்ற சிவபெருமானும், அருகில் ஸ்ரீதேவி, பூதேவி சமேதராக வரதராஜ பெருமாளும் பக்தர்களுக்கு அருள் பாலிக்கின்றனர். சிவபெருமான் வாழைப்பழ (கதலி) அமைப்பில் இங்கு சுயம்புவாக எழுந்தருளியுள்ளார். இந்த கோயிலில் கருடாழ்வார், விஷ்வ சேனர், லெட்சுமி நரசிம்மன், செங்கமல தாயார், அனுமன், கிருஷ்ணன், பன்னிரு ஆழ்வார்கள், காலபைரவர் ஆகியோருக்கு தனி சன்னதிகள் உள்ளன. 2 ஏக்கர் பரப்பளவில் உள்ள இந்த கோயில் வளாகத்தில் கொடிமரமும், தல விருட்சமாக மகிழ மரமும், பிரம்ம தீர்த்த குளமும் உள்ளது. மற்றொரு சிறப்பம்சமாக வேறெந்த கோயில்களிலும் காண முடியாத வகையில் மாந்தி என்ற சிலையுடன் கூடிய நவக்கிரக சன்னதி உள்ளது.

தல வரலாறு

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பு இப்பகுதியில் ஓடிய நாகலாற்றின் கரையில் ஜம்பைப்புல் நிறைந்த வனப்பகுதி இருந்தது. இப்பகுதியில் சுயம்புவாக கதலி வடிவில் எழுந்தருளிய சிவபெருமானுக்கு கண்டமனூர் ஜமீன் சார்பில் சிறிய கோயில் கட்டப்பட்டிருந்தது. கோயிலை சுற்றிய பகுதிகளில் ராஜகம்பளத்தார் இனத்தை சேர்ந்தோர் வசித்து வந்தனர். இந்நிலையில் தங்ளது வீடுகளில் வைத்துள்ள பாலின் அளவு வெகுவாக குறைந்து போவது கண்டு அப்பகுதி மக்கள் குழப்பமடைந்தனர். ஒரு நாள் மறைந்திருந்து அவர்கள் கண்காணித்த போது நாகப்பாம்பு ஒன்று வீடுகளில் வைக்கப்பட்டுள்ள பாலை அருந்துவதை கண்டனர். அவர்கள் அதனை கொல்ல முயன்றனர். அவர்களிடம் இருந்து தப்பிய பாம்பு கதலி கோயில் கருவறையில் இருந்த ஒரு புற்றுக்குள் நுழைந்தது.

அந்த புற்றை மண்வெட்டியால் அகற்ற மக்கள் முயன்றனர். அப்போது ரத்த காயத்துடன் பாம்பு வெளியேறிய போது, ‘இனி என்னால் உங்களுக்கு தொல்லை ஏற்படாது. என்னை மனமுருக வணங்குவோரின் துன்பங்களை தீர்ப்பேன். உங்களுக்கு எப்போதும் பாதுகாவலாக இருப்பேன்’ என அசரீரி ஒலி்த்தது. தொடர்ந்து அந்த பாம்பு மறைந்தது. இச்சம்பவத்தில் மண்வெட்டியால் பாம்பின் உடலில் ஏற்பட்ட காயம் கோயில் கருவறையில் உள்ள கதலியின் மேல் தழும்பாக பதிந்துள்ளதை இன்றும் காண முடிகிறது. பிற்காலத்தில் மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர்கள் சைவ, வைணவ சமயங்களின் இணைப்பை பலப்படுத்தும் வகையில் அந்த கோயில் கருவறையில் வீற்றிருக்கும் கதலியுடன், ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜ பெருமாளின் விக்கிரகத்தையும் அமைத்தனர்.

இக்கோயிலின் தொன்மை குறித்து இங்குள்ள கல்வெட்டுகள் மூலம் அறிய முடிகிறது. சிவாலயங்களில் மட்டுமே கால பைரவர் சன்னதி அமைப்பது வழக்கம். இக்கோயிலில் கால பைரவர் சன்னதியும் உள்ளது தனி சிறப்பு. கால பைரவருக்கு வெள்ளை பூசணிக்காய் விளக்கு போட்டு வழிபட்டால் கடன் பிரச்னை மற்றும் மனக்குழப்பங்களிலிருந்து தீர்வு கிடைக்கும் என்பது பக்தர்களின் அசைக்க முடியாத நம்பிக்கை. இங்கு ஆண்டுதோறும் சித்திரை திருவிழா 11 நாட்கள் நடைபெறுகிறது. சித்திரை திருவிழாவில் கதலி நரசிங்க பெருமாள், ஸ்ரீதேவி, பூதேவியருடன் நகர்வலம் வந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பார். இதில் முக்கிய விழாவாக தேரோட்டம் நடைபெறுகிறது. மேலும் வைகாசி விசாகம், ஆடி திருமஞ்சனம், பதினெட்டாம் பெருக்கு, கிருஷ்ண ஜெயந்தி உள்ளிட்ட விழாக்கள் சிறப்பாக கொண்டாடப்படுகின்றன. ஆண்டிபட்டி பஸ் ஸ்டாண்டிலிருந்து இந்த கோயிலுக்கு பக்தர்கள் சென்று வர பஸ் மற்றும் ஆட்டோ வசதி உள்ளது. – Source: dinakaran


* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply