
ராமாயண காவியத்தின் காவிய தலைவனான ராமபிரான், திருமால் எடுத்த மனித அவதாரம் ஆகும். ராம அவதாரத்தில், பலவிதப்பட்ட உறவின் மேன்மைகளை, எந்தவிதமான கஷ்டங்கள், சங்கடங்கள், சந்தர்ப்பங்கள் வந்தாலும் எப்படி சோதனைகளையும் வேதனைகளையும் தாண்டி கட்டிக் காப்பாற்ற வேண்டும் என்பதை மானிடர்களுக்கு உணர்த்த வேண்டி, தெய்வம், மனிதனாக வாழ்ந்து காட்டிய வாழ்வியல் நெறிகள் போதிக்கப்படுகின்றன. காவியம் முழுவதும், ராமச்சந்திர மூர்த்திகளின் நற்குணங்களே பிரதிபலித்தாலும், அதில் எடுப்பாகத் தெரிவது ஏகபத்தினி விரதன் என்ற நல்லொழுக்கம் மிக்க நற்குணம் ஆகும். இளமையை சரியாகப் பயன்படுத்திக்கொண்டால் முதுமையில் எதைப்பற்றியும் கவலைப்படத் தேவையில்லை என்ற ஆரம்பப் பாடத்தின் அரிச்சுவடியே இங்கிருந்துதான் தொடங்குகின்றது.
வரையா ஓவியம் போன்ற சீதாதேவியோடு, காவிய தலைவன் சேர்ந்து மகிழ்ந்திருந்த நேரங்களைவிட, பிரிந்து வாடி இருந்த நேரங்களே அதிகம். இருந்தும், இவர்கள் ஒன்றாய் வாழ்ந்த சொற்ப நேரத்தில், கணவன் மனைவி உறவினை, ெதய்வீக சம்பவம் ஆக்கும் ஒரு நிகழ்வினை கவி தனது கற்பனை வளத்தால் சொல்லோவியமாக வடிக்க, அந்த அற்புத வரிகளை உள்வாங்கிக்கொண்ட சிற்பி ஒருவன் தனது சிற்ப திறத்தால் தெய்வீக வடிவம் ஆக்கி அற்புதம் படைத்து விட்டான். இந்த கல்லோவியம் எங்கே கோயில் கொண்டு அருளுகின்றது? அந்த அதி அற்புத சம்பவம்தான் எது? போன்ற கேள்விகள் எழுகின்றன. அதுதான் பூலோக வைகுந்தம். சேலம் மாவட்டம் சங்ககிரி வட்டத்தைச் சேர்ந்த வைகுந்தம் என்னும் ஊரே நாராயணப் பெருமாள் நித்திய வாசராக திருமகளோடு எழுந்தருளியுள்ள தல மகிமைப் பெற்ற ஊராகும்.
இங்கு பெருமாள் கோயிலில், கோயில் கொண்டருளும், லட்சுமி நாராயணப் பெருமாளாகிய மூலவரின் திருமேனி அழகில்தான் அந்த உன்னத சம்பவம் சிற்றுளியால் செதுக்கப்பட்டுள்ளது. வைகுந்தம், சேலம் பைபாஸ் சாலையில், சங்ககிரியிலிருந்து 7 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. செல்லியம்மன் (செல்லாண்டியம்மன்) திருக்கோயில் நுழைவு வளைவு நம்மை வரவேற்கின்றது. தற்பொழுது நிசப்தம், ஓசோன் படலம்போல் எங்கும் பரவி வியாபித்துள்ளது. இருந்தும் முன்பு ஒலித்த மந்திர ஒலியாக புகையின் எதிரொலியாகி, நிசப்தத்திற்குள், தெய்வீகமாக நிறைந்திருப்பதை நன்றாக உணர முடிகின்றது. ஈசானத்தில், சிவாலயமும், பஸ்சிமத்தில் விஷ்ணு கிரகமும் முக்கிய ஊர்களில் அமைக்கப்பெற்று ஊரின் இருவிழி போல முக்கியத்துவம் பெற்றன. 18 பட்டிகளுக்கும், வைகுந்தம், லட்சுமி நாராயணப் பெருமாள் திருக்கோயிலும், பாக்கீஸ்வரர் திருக்கோயிலும் பொதுவான திருக்கோயில்கள் ஆகும்.

18 கிராமங்கள் சேர்ந்தது ஒரு ஜமீன். அந்த ஜமீனுக்கு உரிய முக்கியமான ஊரில் பொதுக்கோயில்களாக இவ்விரு கோயில்களும் எழுப்பப்படும். சங்ககிரி ஜமீனைச் சேர்ந்த வைகுந்தம் முக்கியத்துவம் பெற்றிருந்தால், இங்கு இவ்விரு திருக்கோயில்களும் எழுப்பப்பட்டுள்ளன. சிவாலயத்தைத் தாண்டித்தான் பெருமாள் கோயிலுக்குச் செல்ல வேண்டும். ஊரோ வைகுந்தம், இறைவனோ, அலங்காரப் பிரியன் ஆன வைகுந்தவாசி. அவனது திருவிடம் எப்படி இருக்கும்? செங்கற்கள் வெளியே தெரிய வெறும் கூடாக, பாழடைந்த பழைய கோயிலாகக் காட்சி அளிக்கிறது. கிழக்குப் பார்த்த திருக்கோயில். கருட ஸ்தம்பத்தின் பொலிவு, கோயில் சீரும், சிறப்புமாக இருந்ததை நமக்கு எடுத்துச்சொல்கின்றது. ஸ்தம்பத்தின் வடக்கு புறத்தில் பிரதிஷ்டையாகி உள்ள அஞ்சனை மைந்தன் திருஉருவம், நெஞ்சத்திற்கு நெருக்கமாகின்றது. அப்படியோர் ஜீவகளை.
முன் மண்டபம் செங்கற்பணியால் ஆனது. அர்த்த மண்டபம், கருவறை, கருங்கற்பணியால் ஆனது. திராவிடர் பாணி வட்ட வடிவ விமானம் தன் கட்டுமானத்தை இழந்துவிட்டது. தன்னார்வம் மிக்க தொண்டன்போல, இந்த அவலத்தை மறைக்க புதர்கள் தன்னால் ஆன வரைக்கும் மண்டி, பாடுபடுகின்றன. இந்து சமய அறநிலையத்துறைக்கு உட்பட்ட திருக்கோயில். ஒருகால பூஜைகூட ஒரு கால கட்டத்தில் நடைபெறாமல் சுத்தமாக வழிபாடு நின்று விட்டது. கோயிலை சுற்றி 18 ஊர்களிலிருந்தும் ஒரு விளக்கு கூட ஏற்றப்படவில்லை. முன்மண்டபம், அர்த்த மண்டபம், கருவறை என திருக்கோயிலின் அமைப்பு அமைந்துள்ளது. முன் மண்டபத்தில், பாம்பரசன் ஆதிசேடன், ஸ்ரீமத் நம்மாழ்வார் திருமேனி, ஸ்ரீமத்ராமானுஜர் திருமேனி பிரதிஷ்டை செய்விக்கப்பட்டு அருளாசி வழங்குகின்றனர். மகான்களைத் தேடி நாம்தான் செல்ல வேண்டும். வைணவ சம்பிரதாயத்தின் உன்னதம் மிக்கவர்களை தரிசிக்கும் பெரும் பேற்றினையும் இங்கு பெறுகின்றோம்.
துவார பாலகர்கள், திருவிடத்தில், இருபுறமும் ஆதிசேடனே நாக வடிவ கல்லாக இருந்து காவல் காக்க, மாதவம் செய்து கிடைக்கக்கூடிய மாதவன் தரிசனத்தைப் பெறும், பெரும் பேற்றினைப் பெறுகின்றோம். ராமசௌந்தர்யம் பொங்கிப் பெருகி பிரகாசிக்கும் தேஜஸ்தோடு, லட்சுமி நாராயணப் பெருமாள் இங்கே சேவை சாதிக்கின்றார். பரந்த அகன்ற புஜபல பராக்கிரமம் மிக்க ராமனின் புஜபலத்தில் இப்புவியே விச்ராந்தியாய் இருப்பது தெரிய வருகின்றது. பகவானின் அகன்ற பரந்த தேக கட்டில், வடிவாய், வலமார்பில் இடம் பெறும் லட்சுமி தேவி, இங்கே சின்னஞ்சிறு சிங்கார உருவில் இடதுபக்கம் திருவமர்ந்து, சேவிக்க வருபவர்களை நேருக்கு நேராக பார்க்கும் அபூர்வ திருக்கோலத்தில் திருக்காட்சி அளிக்கின்றாள். திருமகளின் திருப்பார்வை பட்ட உடன் லட்சுமி கடாட்சத்திற்கு ஆளாகின்றோம். நாராயணப் பெருமாளின் ஆஜானுபானுவான மேனியை, தேவியின் வலதுகரம் சுற்றி வளைத்து பற்றியுள்ளது.

திருமகளின் முகம், கோடி சூரிய பிரகாசத்தோடு மின்னி, பரவசத்தை, புன்னகை வாயிலாக வெளிப்படுத்தினாலும், சின்னதாக ஒரு சங்கடக்கீற்று திருமுகத்தில் இழையோடி உள்ளதே. அதற்கு என்ன காரணம்? நாராயணப் பெருமாளின் பலம் பொருந்திய இடது திருக்கரம், தன்னை மலரினும் மென்மை ஆக்கிக்கொண்டு, செல்வமகளின் இடது மார்பினை ஸ்பரிசித்தவாறு உள்ளது. புண்ணாகிப் போன மார்பின், ரணத்தை ஆற்றவே இவ்விதம் வாஞ்சை காட்டுகின்றார். காவியம், சிற்பம் என ஆனதற்கான மேலே கண்ட சம்பவத்தை நேர்காணலாகக் காணலாம். புண் எப்படி ஆனது? ராமாயணத்தில் இந்த சமயம் வனவாச காலக்கட்டம். மங்கை அவள் சீதை முள்ளில் நடந்தாள். மன்னன் அவன் கண்ணில் கங்கை வழிந்தாள். துயர் நிறைந்த காலக்கட்டத்தில், ஒரு மலை மீது, மங்கை மடி மீது தலை வைத்து, வழி களைப்பில் ராமர் சற்றே கண் அயர்ந்தார். அந்த வேளையில் மைவிழியாள், மெய்யழகில் மையல் கொண்ட, காகாசுரன் என்னும் அசுரன் காகம் உருவில் மாறி வந்து, மைதிலியின் இடமார்பினைக் கொத்தினான்.
மார்பகம் புண்ணாகி அதிலிருந்து குருதி சொட்ட அந்த ஈரம் பட்டு கண் விழித்த ராமர், வந்து தொல்லை கொடுப்பது சாதாரண பறவையான காகம் அல்ல காகாசுரன் என்பதைக் கண்டுகொண்டு ஒரு தர்ப்பையை கிள்ளி காகத்தை நோக்கி ஏவ, அது சக்ராயுதமாக மாறி தப்பி ஓடிய காகத்தை துரத்திச்சென்று அதன் கண்ணைக் கவ்வி, குருடாக்கியது. தர்ப்பை வளைந்து, வளைந்து சென்று காகத்தை துரத்திய பாதையே நீர் நிரம்பிய குசஸ்தலையாகி, ராமகிரியைத் தழுவி உத்தரவாகி கனியாய் ஓடுகின்றது. குசம் என்றால் வடமொழியில் தர்ப்பை என்னும் பொருள் படும். ராமன், சீதா மடியில் கண்ணுறங்கிய மலையே, ராமகிரி என அழைக்கப்படுகின்றது. மடி மாறி, சீதாதேவியை தன் மடியில் அமர வைத்து, ரணத்தை ஆற்றும் காவிய சம்பவமே, இங்கே லட்சுமி நாராயணப் பெருமாள் திருமேனியில் இடம் பெற்றுள்ளது.
சேவை செய்வது மனைவிக்கு மட்டுமே கடமை என்றில்லாமல், தேவைப்பட்டால் மனைவிக்கும், கணவன் சேவை ஆற்ற வேண்டும் என்பதை எடுத்துக் காட்டுவது இந்த அற்புத சம்பவம் ஆகும். மனைவி என்னும் உறவின் மேன்மையை அறிய வந்ததால் ராமன் ஏக பத்தினி விரதனாக பிரபலம் ஆனார். லட்சுமி நாராயணப் பெருமாளை தரிசிக்கவே, நாம் முன்னோர்களின் பூஜா பலனைப் பெற்றிருக்க வேண்டும். பெற்ற தாய், தந்தையையே புறக்கணிககும் இக்காலக்கட்டத்தில், நம்மை வழி நடத்துவதே நமது முன்னோர்கள்தான் என்பதை அறிந்துகொள்ள வேண்டும். அவர்களுக்கும் நமக்கும் 2 விதத்தில் தொடர்பு இருந்தவாறே உள்ளது. 1. தலைமுறை சாபம். இது பல வகைப்படும். எந்த வகையாக இருந்தாலும் சரி. அது நம்மை நாக தோஷமாகப் பற்றிக்கொள்ளும். ஜாண் ஏறினால் முழம் சறுக்கும். இதற்கு ஒரே தீர்வு நாக வழிபாடு. இத்திருக்கோயிலில் பாம்பரசன் ஆதிசேடனே கோயில் கொண்டுள்ளான். 2. பூஜா பலன்.

பிருத்துக்கள் நேரமான மதியம் 12 மணியிலிருந்து 1 மணிக்குள் லட்சுமி நாராயணப் பெருமாள் திருமுன் நின்று முன்னோர்களை நினைத்து வழிபட, பெருமாள், அவர்களை திருப்திபடுத்தி, தலைமுறை சாபங்கள் நீங்கவும், அவர்கள் பூஜா பலன் நம்மை வந்து சேர்ந்து நன்மை பெறவும் அனுக்கிரகம் செய்தருளுகின்றார். இதுபோல முன்னோர்கள் பூஜா பலன்களைப் பெற்றவர்களை கனவில் தோன்றி அழைத்து வருகின்றார். அப்படி வந்தவர்கள், நின்றுபோன வழிபாடு இத்திருக்கோயிலில் மீண்டும் நடக்க ஏற்பாடுகள் செய்துள்ளனர். மெச்சத்தக்க தெய்வ கைங்கரியம். திருக்கோயிலின் அர்ச்சகரான ஸ்ரீமத்.கிருஷ்ணன் பட்டாச்சாரியார் அவர்கள், ‘‘முன்னோர்கள் வழிபாட்டின் பலனால் இந்த மண்ணை மிதித்து, பகவானின் திருதரிசனம் பெற்றுவிட்டீர்கள். இனி உங்கள் வாழ்வில் நல்லதே நடக்கும்’’ என நம்பிக்கை அளிக்கின்றார். பிரசன்னமும் பார்த்துச் சொல்கின்றார். கண் படைத்தவர்களும், மனம் படைத்தவர்களும், பணம் படைத்தவர்களும் வாருங்கள் என அழைப்பதுபோல் உள்ளது கோயிலின் துயர நிலை. வேறு குறை ஒன்றும் இல்லை. மறைமூர்த்தி கண்ணா! நாராயணப் பெருமாளே! என சேவித்து பிரியா விடை பெறலாம். – Source: dinakaran
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
