
“நான் உனக்குள் இருக்கிறேன். நீ எனக்குள் இருக்கிறாய். தொடர்ந்து இவ்விதமாகவே நினைத்து வா… அப்போது நீ அதை உணர்வாய்”.
இளம்பாபா அடிக்கடி சீரடியில் உள்ள தன் அன்பர்களிடம் மேற்கண்டவாறு கூறினார். அதனால் இளம்பாபா மீண்டும் சீரடிக்கு திரும்பி வருவார் என்று மகல்சாபதி உள்பட அனைவரும் உறுதியாக நம்பினார்கள்.
ஆனால் கடவுளின் அவதாரமாக திகழ்பவரின் செயல்களை யாரால் கணிக்க முடியும்? என்றாலும் சீரடி மக்கள் இளம்பாபாவை எதிர்பார்த்து நம்பிக்கையோடு காத்திருந்தார்கள். சீரடியில் இருந்து வெளியேறிய இளம்பாபா 4 ஆண்டுகள் எங்கு சென்றார்? என்ன செய்தார்? என்பது இதுவரை யாருக்கும் தெரியாது.
அந்த 4 ஆண்டுகளில்தான் பாபா, அற்புதங்கள் புரியும் தெய்வீக ஆற்றலை முழுமையாகப் பெற்றார் என்பார்கள். ஆனால் பாபா அது பற்றி ஒரு போதும் யாரிடமும் வெளிப்படையாக சொன்னதில்லை. சில தகவல்களை மட்டுமே அவர் தனக்கு நெருக்கமானவர்களிடம் தெரிவித்தார். அதன் அடிப்படையில் பாபாவின் 4 ஆண்டு கால வாழ்க்கை பற்றி இரு விதமான நிகழ்ச்சிகள் கூறப்படுகிறது.
சீரடியை விட்டு வெளியேறிய இளம்பாபா மராட்டியம், குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் உள்ள புனித மலைகளில் தவம் இருந்ததாக ஒரு சாரார் கூறி வருகிறார்கள் அதுபற்றி நாம் கடந்த அத்தியாத்தில் பார்த்தோம்.

ஆனால் இளம்பாபா சீரடியை விட்டு வெளியேறிய 4 ஆண்டுகளும் தன் குரு வெங்குசாவுடன் இருந்ததாக மற்றொரு சாரார் சொல்கிறார்கள். இதற்கான குறிப்பு உள்ளது. அந்த குறிப்புகளுக்கு போதுமான ஆதாரங்கள் கிடைக்காவிட்டாலும், அப்படித்தான் நடந்திருக்க வேண்டும் என்று சாய்பக்தர்கள் நம்புகிறார்கள்.
பெரும்பாலான சாய்பக்தர்களுக்கு தெரியாத அந்த குறிப்பு என்ன தெரியுமா?
சீரடியில் வேப்ப மரத்தடியில் இருந்த இளம் பாபாவுக்கு உரிய முறையில் தியானம் செய்ய முடியவில்லை. தியானம் இருக்க அவர் மனம் ஏங்கியது. துடித்தது, தவித்தது. அதனால் தான் அவர் சீரடியை விட்டு திடீரென வெளியேறி விட்டார். கோதாவரி நதிக்கரை ஓரமாக கிழக்கு நோக்கி அவர் கால்கள் தாமாக நடந்தன. சில தினங்களில் அவர் திரியம்பகேஸ்வரர் பகுதியை சென்றடைந்தார்.
உயர்ந்த மலை சிகரங்கள் கொண்ட அந்த பகுதியைப் பார்த்ததும் இளம்பாபா மனம் உற்சாகத்தில் மிதந்தது. அதில் ஒரு மலை சிகரத்துக்கு சென்றார். அங்கு அவர் தியானம் இருக்க தொடங்கினார்.
சுமார் ஓராண்டுகள் அந்த மலையில் இளம்பாபா தவவாழ்க்கை மேற்கொண்டார். அந்த ஓராண்டு காலம் அவர் என்ன சாப்பிட்டார்? யார் சாப்பாடு கொடுத்தார்கள்? என்ற எந்த தகவலும் தெரியவில்லை. தனது குரு வெங்குசா கொடுத்த செங்கல்லை மட்டுமே அவர் தன்னுடன் வைத்திருந்தார். வெங்குசாவின் ரத்தக்கறை படிந்த துண்டை தலையில் கட்டியிருந்தார். இந்த இரண்டும் சேர்ந்து இளம் பாபாவை காப்பாற்றின.
ஓராண்டு கடந்த பிறகு தியானத்தில் இருந்து மீண்ட இளம் பாபாவுக்கு, தன் குருநாதர் பற்றிய நினைவு வந்தது. 12 ஆண்டுகள் தன் குருநாதருடன் வாழ்ந்த இடங்களுக்கு செல்ல வேண்டும் என்ற விருப்பம் ஏற்பட்டது. கோதாவரி நதிக்கரை ஓரமாக பாபா மீண்டும் நடக்கத் தொடங்கினார்.

கோபர்கான் நகரை கடந்த போது சுமார் 20 மாதங்களுக்கு முன்பு எந்த வழியாக சீரடிக்கு வந்தாரோ, அந்த வழி தெரிந்தது.
அந்த வழியில் தொடர்ந்து நடந்த போது, எந்த இடத்தில் அவர் தன் குருவை பிரிய நேரிட்டதோ அதே இடத்துக்கு வந்து சேர்ந்திருந்தார். எந்த மாதம் குருவை பிரிய நேரிட்டதோ, அதே மாதம் அவர் அங்கு வந்திருந்தார்.
ஆனால் அந்த பகுதியில் வளர்ந்திருந்த புதர்களும் செடி, கொடிகளும் இளம் பாபாவுக்குள் திடீர் குழப்பத்தை ஏற்படுத்தின. அந்த இடமே அடையாளம் தெரியாதபடி மாறி இருந்தது. தன் குரு வெங்குசா எந்த இடத்தில் செங்கலால் தாக்கப்பட்டார் என்பதை அவரால் துல்லியமாக கண்டுபிடிக்க இயலவில்லை.
உடனே இளம்பாபா, குரு வழங்கியிருந்த செங்கலை எடுத்தார். அதை குருவின் ரத்தக்கறை படிந்த துணியில் வைத்துக்கட்டினார். பிறகு குருவை நினைத்து தியானத்தில் ஆழந்தார். மறுவினாடி அந்த பகுதி மாறியது. 2 ஆண்டுகளுக்கு முன்பு எப்படி இருந்ததோ அப்படியே அவருக்கு காட்சி அளித்தது.
தன்னை கொல்வதற்காக வீசப்பட்ட செங்கலை, குரு வெங்குசா, தன் தலையில் பட செய்து ரத்தம் சிந்த கீழே சரிந்து விழுந்த இடம் மிக, மிக தெளிவாக இளம்பாபாவுக்கு தெரிந்தது.

அந்த இடத்துக்கு இளம் பாபா சென்றார். அங்கு அமர்ந்து தன் குரு வெங்குசாவை நினைத்து பிரார்த்தனை செய்யத் தொடங்கினார்.
“ஓ….குருஜி, நீங்கள் ரத்தம் சிந்தி என் உயிரைக் காப்பாற்றினீர்கள். உங்கள் தரிசனத்தை காண விரும்புகிறேன். என் முன் வாருங்கள்” என்று பிரார்த்தனை செய்தார்.
அதற்கு வெங்குசா அசரீரியாக, “கவலைப்படாதே…. என் சக்தி உனக்கு எப்போதும் பாதுகாப்பாக இருக்கும்” என்றார். இளம்பாபா சமரசம் ஆகவில்லை.
“எனக்கு பெற்றோர் கிடையாது. உடன் பிறந்தவர்கள் என்று யாரும் இல்லை. உற்றார், உறவினர்களும் கிடையாது. எனக்கு எல்லாமே நீங்கள்தான். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இதே தினத்தன்றுதான் நீங்கள் என் உயிரைக் காப்பாற்றினீர்கள்.

எனவே இன்று நீங்கள் எனக்கு தரிசனம் தந்தே ஆக வேண்டும். இல்லையெனில் நான் உயிர் வாழமாட்டேன். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு எந்த செங்கலை அந்தரத்தில் நிற்க செய்து என்னைக் காப்பாற்றினீர்களோ… அதே செங்கலை என் தலையில் அடித்து உயிரை மாய்த்துக் கொள்வேன்” என்றார்.
இவ்வாறு சொல்லியபடி இளம்பாபா அந்த செங்கலை கொண்டு தன் தலையில் அடிக்கத் தொடங்கினார். அடுத்தவினாடி அங்கு வெங்குசா தோன்றினார். செங்கலால், தன்னைத் தானே அடிக்க முயன்ற இளம்பாபாவை தடுத்து நிறுத்தினார். அதோடு அவர் இளம்பாபாவுக்கு ஆசியும் வழங்கினார்.
பிறகு அவர் இளம்பாபாவிடம், “என் மீது நீ கொண்டுள்ள உண்மையான பக்தியும், அன்பும் காரணமாகவே நான் சமாதியில் இருந்து எழுந்து இங்கு வந்துள்ளேன். நீ இந்த உலகுக்கே குருவாகத் திகழப்போகிறாய். உன் சமாதியில் இருந்தும் நீ உன் பக்தர்களை ஆசீர்வதித்து காப்பாய். நீ சிவனின் மறு அவதாரம். அவரைப் போலவே நீயும் மாயக் கலியிடம் இருந்து மக்களை காப்பாற்றுவாய். நான் சமாதியில் இருந்து வெளியில் வந்து விட்டதால் 2 ஆண்டுகள் சூட்சம உடலுடன் உன் அருகிலேயே இருப்பேன். எனவே நீ தொடர்ந்து தியானம் செய்” என்றார்.
அடுத்த வினாடி வெங்குசா அங்கிருந்து மறைந்து போனார். குருவை மீண்டும் பார்த்து, ஆசி பெற்றதால் இளம்பாபா மனம் பூரித்தது. மகிழ்ச்சியால் மனம் நிறைவு பெற்றது. குரு வெங்குசா சொன்னபடி இளம்பாபா அந்த இடத்தில் 2 ஆண்டுகள் தவம் இருந்தார். இடையிடையே வெங்குசா அசரீரியாக இளம்பாபாவுக்கு சில உத்தரவுகளை, அறிவுரைகளை தெரிவித்தார். அதன்படி இளம்பாபா நடந்து கொண்டார்.

அந்த இரண்டாண்டு தவம், தியானம் இளம்பாபாவை முற்றிலுமாக மாற்றி இருந்தது. அவர் முகத்தில் கருணை ஒளி வீசியது.
1858-ம் ஆண்டு ஒரு பவுர்ணமி தினத்தன்று….. இளம்பாபா தியானத்தில் ஆழ்ந்திருந்தார். அப்போது குரு வெங்குசா அங்கு திடீரென்று தோன்றினார்.
அவர் இளம்பாபாவிடம், “நீ மீண்டும் சீரடிக்கு செல். நான் அங்குள்ள வேப்ப மரம் அருகில் பூமிக்கு அடியில் ஜோதி ரூபமாக வந்து அமர்ந்து இருப்பேன்” என்றார். இதைக் கேட்டதும் இளம்பாபா மிகவும் மகிழ்ச்சி அடைந்தார். அன்றே அவர் சீரடி நோக்கி நடக்கத் தொடங்கினார்.
ஆனால் இளம்பாபா நேரடியாக சீரடிக்கு சென்று சேர்ந்து விடவில்லை. ஒரு அற்புதத்தை நடத்தி காட்டி விட்டு, அதன் மூலம் சீரடி நகருக்குள் பிரவேசிக்க இளம்பாபா முடிவு செய்தார். அந்த அற்புதத்தை நிகழ்த்த இளம்பாபா தேர்வு செய்த ஊர் தூப்கேதா எனும் கிராமம் ஆகும். இந்த கிராமம் மராட்டிய மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தில் உள்ளது.
சீரடியில் இருந்து சுமார் 140 கிலோ மீட்டர் தொலைவில் தூப்கேதா கிராமம் உள்ளது. இளம் பாபா அந்த கிராமத்துக்கு வந்து சேர்ந்தார்.
அந்த கிராமத்து மக்கள் இளம்பாபாவை கண்டுகொள்ளவில்லை. இளம்பாபாவின் தோற்றத்தைப் பார்த்து ஏதோ ஒரு பித்தர் என்றே நினைத்தனர்.

“அல்லா மாலிக்” என்று உச்சரித்தபடி தூப்கேதா கிராமத்தில் இருந்து சற்று தொலைவில் உள்ள வனப்பகுதிகளில் சுற்றித் திரிந்தார். ஒரு நாள் அந்த வனத்தில் ஒரு மாமரத்தின் அடியில் இளம்பாபா உட்கார்ந்திருந்தார். அப்போது தூப்கேதா கிராமத்தைச் சேர்ந்த சாந்த் பாட்டீல் என்பவர் தோளில் குதிரைச் சேணத்தை சுமந்தபடி கவலையோடு சென்று கொண்டிருந்தார்.
அவரை வைத்துதான் இளம்பாபா ஒரு பெரிய அற்புதத்தை நடத்தினார். அந்த அற்புதம்தான் இளம் பாபா வாழ்வில் உலகமே கடவுளாகக் கொண்டாட செய்த மிக முக்கியமான மாற்றத்தை ஏற்படுத்தியது. அது மட்டுமின்றி, இளம்பாபாவுக்கு “சீரடி சாய்பாபா” என்ற திருநாமம் ஏற்படவும் அச்சாரமாக அமைந்தது. – Source: Maalaimalar
* இந்த பதிவு உங்களுக்கு பயனுள்ளதாக இருந்தால், உங்கள் நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
