வெள்ளவத்தை, பம்பலப்பிட்டி உள்ளிட்ட கொழும்பு மாநகரப் பகுதிகளில் வீடு வீடாகச் சென்று பொலிஸார் அங்குள்ளவர்களின் தகவல்களைத் திரட்டுவதை நிறுத்த ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க நடவடிக்கை எடுத்துள்ளதாக தெரியவருகிறது.
பொலிஸாரின் நடவடிக்கை தொடர்பில் கொழும்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மனோ கணேசன் தொலைபேசியூடாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அறிவித்துள்ளார்.
பொதுமக்களின் தகவல்களை வீடு வீடாகச் சென்று பொலிஸார் பதிவு செய்வது தவறென ஜனாதிபதி ஏற்றுக் கொண்டுள்ளார் என மனோ கணேசன் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
உடனடியாக இது தொடர்பில் உரிய பணிப்புரையை வழங்குவதாக ஜனாதிபதி இதன்போது தன்னிடம் உறுதியளித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை “வெள்ளவத்தை, பம்பலபிட்டி உட்பட கொழும்பு மாநகர மற்றும் மாவட்ட பொலிஸ் நிலையங்களினால், வீடு வீடாக கொண்டு வரப்படுவதாக கூறப்படும் பொலிஸ் பதிவு படிவங்களை நிரப்பி கொடுக்க வேண்டாம்” என மனோ கணேசன் கொழும்பு மக்களுக்கு அண்மையில் அறிவுறுத்தியிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.



