ஜனாதிபதி தெரிவிற்கான வாக்கெடுப்பு சற்றுமுன் நிறைவடைந்துள்ள நிலையில் இன்னும் சற்று நேரத்தில் இலங்கையின் அடுத்த ஜனாதிபதியின் பெயர் அறிவிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
இதேவேளை வாக்கெண்ணும் பணிகள் சற்று நேரத்தில் ஆரம்பமாகும்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர்களான கஜேந்திரகுமார் பொன்னம்பலம் மற்றும் செல்வராஜா கஜேந்திரன் ஆகியோரைத் தவிர அனைவரும் வாக்களித்துள்ளனர்.
இலங்கையின் ஜனாதிபதி இன்னும் சில மணிநேரங்களில் தெரிவு செய்யப்படவுள்ள நிலையில் நாடாளுமன்றில் வாக்களிப்பு நடவடிக்கை மும்முரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்த நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர் சமன்பிரிய ஹேரத் சேலைன் போத்தலோடு வைத்தியசாலையிலிருந்து நாடாளுமன்றம் வந்து வாக்களித்துள்ளார்.
சுகயீனம் காரணமாக அவர் முன்னுரிமை அடிப்படையில் தமது வாக்கினை பதிவு செய்திருந்ததுடன், வாக்களித்ததன் பின்னர் அவர் வைத்தியசாலைக்கு செல்லவுள்ளதாக நாடாளுமன்ற செயலாளர் அறிவித்திருந்தார்.
இதேவேளை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் டீ.வீரசிங்கவும் சுகயீனம் காரணமாக முன்னுரிமை அடிப்படையில் வாக்களித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்வதற்கான வாக்கெடுப்பு ஆரம்பமாகியுள்ளது.
முதலாவதாக சபாநாயகர் மகிந்த யாபா அபேவர்தன தனது வாக்கினை பதிவு செய்துள்ளதோடு, அடுத்ததாக பதில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் வாக்கினை பதிவு செய்துள்ளார்.
தொடர்ந்து பேர் குறிப்பிட்டு அழைக்கப்படும் உறுப்பினர்கள் தமது வாக்குகளை பதிவு செய்து வருகின்றனர். அத்துடன் இன்றைய தினம் நாடாளுமன்ற அமர்விற்கு முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்ச சமூகமளித்துள்ளார்.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன், ஜனாதிபதி தெரிவிற்கான வாக்களிப்பிற்கு சமூகமளிக்கவில்லை.
அகில இலங்கை தமிழ் காங்கிரஸின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலமும் வாக்களிப்பினை புறக்கணித்துள்ளார்.
புதிய ஜனாதிபதியை தெரிவு செய்யும் வாக்கெடுப்பு இன்றைய தினம் நடத்தப்படவுள்ள நிலையில் சற்று முன் நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமாகியுள்ளது.
இன்னும் சற்று நேரத்தில் வாக்கெடுப்பு ஆரம்பமாகவுள்ள நிலையில் இரகசிய வாக்கு சீட்டுக்களை பிரிதொரு நபருக்கு காண்பிக்கக் கூடாது என அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களிடமும் சபாநாயகர் மீண்டும் வலியுறுத்தியுள்ளார்.
இதேவேளை நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் தான் வாக்களிக்க விரும்பும் வேட்பாளரது பெயருக்கு அருகிலுள்ள கூட்டில் ”1” என இலக்கத்தை குறிப்பிட வேண்டும், அவ்வாறில்லை எனில் அந்த வாக்கு செல்லுடியற்றதாக கருதப்படும் என நாடாளுமன்ற செயலாளர் நாயகம் அறிவித்துள்ளார்.



