அசானி புயல் காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக சில இடங்களில் மழை மற்றும் பலத்த காற்று வீசி வருகிறது.
இந்நிலையில் நேற்று அதிகபட்சமாக 70 கிலோ மீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசியது.
இதன் பிரகாரம் அங்கு பல்வேறு பகுதிகளில் இருந்த தடுப்பு கம்பிகள், விளம்பர பலகைகள் காற்றில் சரிந்து விழுந்தது.
தூத்துக்குடி மையவாடி பகுதியில் உள்ள மின்தகன மையத்தில் புகை போக்கி கோபுரம் சரிந்து மின் வயரில் விழுந்ததால் சில மணி நேரம் மின் தடை ஏற்பட்டது. மேலும் மரக்கிளைகளும் முறிந்து விழுந்தது.
இதே போல் ஆத்தூர், ஆறுமுகநேரி, திருச்செந்தூர், மெஞ்ஞானபுரம் உள்ளிட்ட பல பகுதிகளிலும் பலத்த காற்று வீசியது. இதனால் அங்குள்ள மின் வயர்கள் அறுந்தது.
மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் விசைப்படகு மற்றும் இழுவை படகுகள் மூலம் மீன்பிடிக்க செல்வது தடை விதிக்கப்பட்டுள்ளது. இதனால் நாட்டு படகு மீனவர்கள் மட்டும் குறிப்பிட்ட தூரத்திற்கு சென்று மீன்பிடித்து வருகிறார்கள்.
இந்நிலையில் தூத்துக்குடி திரேஸ்புரம் பகுதியை சேர்ந்த மீனவர்கள் ரகீம் (வயது42), அப்துல் காதர் (42), அசம் (40), மைதீன் (45), சதன் (35), மீரான் (45), கிஜோ (25), கனி மரைக்காயர் (45) ரபீக் (19) ஆகிய 9 பேர் நேற்று அதிகாலை திரேஸ்புரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து சங்குகுளி தொழிலுக்கு சென்றனர்.
அவர்கள் நேற்று மாலை திரேஸ்புரம் கடற்கரையில் இருந்து 10 கடல் மைல் தொலைவில் புதிய துறைமுகம் அருகே சங்குகுளித்து கொண்டிருந்தபோது கடலில் பலத்த காற்று வீசியது.
இதனால் கடல் அலைகள் அவர்கள் சென்ற படகின் மீது மோதியது. திடீரென அவர்களது படகில் ஓட்டை விழுந்து தண்ணீர் உட்புகுந்தது. தொடர்ந்து அந்த படகு கடலில் மூழ்க தொடங்கியது.
இதனால் அதிர்ச்சியடைந்த மீனவர்கள் தங்களை பாதுகாத்து கொள்ள கடலில் குதித்தனர். சுமார் 1 மணி நேரம் அவர்கள் தண்ணீரில் தத்தளித்த நிலையில் உயிருக்கு போராடி கத்தி கூச்சலிட்டனர்.
இந்நிலையில் படகு மூழ்குவதை அறிந்த சற்று தூரத்தில் மீன்பிடித்த சக மீனவர்கள் பார்த்து அங்கு விரைந்து வந்தனர். அப்போது 9 மீனவர்களும் நடுக்கடலில் தத்தளித்துக் கொண்டிருப்பது தெரிய வந்தது.
அவர்கள் உடனடியாக விரைந்து சென்று நடுக்கடலில் தத்தளித்து கொண்டிருந்தவர்களை மீட்டு பத்திரமாக திரேஸ்புரம் கடற்கரைக்கு மீட்டு கொண்டு வந்தனர்.
மேலும் அதிர்ஷ்டவசமாக மீனவர்கள் உயிர் தப்பினர். ஆனால் அவர்கள் சென்ற ரூ.10 லட்சம் மதிப்புள்ள படகுகள் முற்றிலும் சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது.



