ஏழை, எளிய மக்கள், ஆதரவற்றவர்கள், தொழிலாளர்கள், வேலை தேடும் இளைஞர்கள் குறைந்த விலையில் 3 வேளையும் உணவு சாப்பிட வேண்டும் என்பதற்காக அம்மா உணவகம் தொடங்கப்பட்டது.
இந்நிலையில் மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவால் தொடங்கப்பட்ட இந்த திட்டம் சென்னையில் மட்டுமின்றி பிற நகரங்ளுக்கும் விரிவுப்படுத்தப்பட்டது.
சென்னையில் வார்டுக்கு 2 அம்மா உணவகங்கள் என்று 400 உணவகங்களும், அரசு ஆஸ்பத்திரிகளிலும் செயல்பட்டு வருகின்றன.
தற்போது 402 அம்மா உணவகங்கள் சென்னை மாநகராட்சி மூலம் செயல்படுகின்றன.
உணவு விற்பனை குறைந்ததால் ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. அதனால் அவர்களுடைய வேலை நாட்கள் குறைக்கப்பட்டதால் சம்பளமும் குறைந்தது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் அம்மா உணவகங்களில் உணவு இலவசமாக வழங்கப்பட்டது.
அதனால் கூட்டம் அலை மோதியது. அதன் பின்னர் படிப்படியாக விற்பனை சரிந்தது.
ஒவ்வொரு கடைகளிலும் ரூ.500, ரூ.700, ரூ.1000 என்ற அளவில் விற்பனையாகிறது.
உணவு பொருட்களுக்கான செலவுக்கு கூட வியாபாரம் ஆகாததால் அம்மா உணவகங்கள் வருவாய் இல்லாமல் தள்ளாடுகின்றன.
பெண் தொழிலாளர்களுக்கு குறிப்பிட்ட நாளில் சம்பளம் கொடுக்க முடியவில்லை.
விற்பனை கூடினால் அதனை வைத்து சமாளிக்கக்கூடும்.
ஆனால் விற்பனை அதிகரிக்காததால் தொடர்ந்து நஷ்டத்தை நோக்கி செல்கிறது.
அம்மா உணவகங்களுக்கு பொருட்கள் வாங்கிய கடன் ரூ.20 கோடியை டி.யு.சி.எஸ். கூட்டுறவு நிறுவனத்திற்கு, மாநகராட்சி கொடுக்க வேண்டி இருந்தது. இதனை கடந்த 2 மாதம் முன்பு கொடுத்து முடித்துள்ளது.
கடன் சுமை, தொடர் வருவாய் இழப்பு அதிகரித்துள்ளதால் உணவு பண்டங்களின் தரமும் குறைந்து விட்டது.
தற்போது அனைத்து மளிகை பொருட்களின் விலையும் உயர்ந்து விட்டன. எண்ணெய், பருப்பு, கோதுமை, அரிசி, உளுந்து உள்ளிட்ட அனைத்து பொருட்களின் விலையும் உயர்ந்ததால் கூடுதல் நஷ்டத்தை அம்மா உணவகங்கள் சந்தித்து வருகின்றன.
அம்மா உணவகங்களை நடத்த ஆண்டிற்கு ரூ.120 கோடி செலவாகிறது. இதனை மாநகராட்சி வருவாயில் இருந்து அளித்து வருகிறது. ஆனால் அதன் மூலம் கிடைக்கும் வருமானம் ஆண்டிற்கு ரூ.10 கோடி மட்டுமே.
இதற்கிடையில் அரசிடம் ரூ.111 கோடி அம்மா உணவங்களுக்காக நிதி கேட்கப்பட்டுள்ளது.
அந்த நிதி கிடைத்தால் தான் அம்மா உணவகங்களை முறையாக நடத்த முடியும். இது குறித்து மாநகராட்சி அதிகாரி ஒருவர் கூறியதாவது:
அம்மா உணவகங்கள் என்பது லாபம், நஷ்டம் பார்க்கிற தொழில் அல்ல.
அதுவும் ஒரு நலத்திட்டம் தான். அதன் மூலம் தினமும் 2 லட்சம் பேர் பயன் அடைகிறார்கள்.
உணவு, உடை, இருப்பிடம் ஆகிய அடிப்படை தேவைகளில் உணவை குறைந்த விலையில் ஏழைகளுக்கு வழங்குகிறோம்.
இதனால் வருவாய் இழப்பு ஏற்படத்தான் செய்யும்.
தினமும் ரூ.30 லட்சம் அம்மா உணவகங்களுக்கு செலவிடப்படுகிறது.
அம்மா உணவகங்களில் உள்ள சிறு, சிறு பிழைகள் கண்டறியப்பட்டு சீரமைக்கப்படுகின்றன.
இதனை மூட வாய்ப்பு இல்லை. தற்போது உணவு பொருட்களின் விலை உயர்வால் செலவு அதிகரித்துள்ளது.
மேலும் வார்டு வரையறைக்கு பிறகு ஒவ்வொரு மண்டலத்திற்கும் உட்பட்ட வார்டுகளில் செயல்படும் அம்மா உணவகங்களுக்கு புதிய எண் வழங்கப்பட்டு முறைபடுத்தப்பட்டுள்ளது.



